இருசக்கர வாகனத்தைத் திருடும் போது பிடிபட்ட ராதா கிருஷ்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தை காணொளி எடுத்து வெளியிட்டது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மதனகலா காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  


தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றபோது, ராதாகிருஷ்ணன் என்பவர் பிடிபட்டார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த இவருக்கு வயது 31. இந்த திருட்டு சம்பவம் குறித்து, பழனிசெட்டிபட்டி காவல்துறை அதிகாரி மதனகலா விசாரணை மேற்கொண்டார்.  


விசாரணையின் போது, தன்னை அஜித் ரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், மிகவும் நகைப்புக்குரிய வகையில் பதிலளித்தார். அதே சமயம், இயலாமையை துரிதமாக வெளிபடுத்தும் திறன், வார்த்தை பகட்டுகள், உயர் நிலை நினைவாற்றல், அதிகாரக் கட்டுடைப்பு, உலகுடன் நெருங்கி/விலகி செல்ல வேண்டிய தேவை  என ஒரு தத்துவவாதிக்கான அனைத்து குணங்களும் அவரது பேச்சில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.            






இந்த வீடியோவைக் கண்ட பலர், இதைவிட நகைப்புக்குரியது ஏதும் இல்லை, இதைவிட உண்மையானது ஏதும் இல்லை,இதைவிடப் பயங்கரமானது ஏதும் (Sublime Effect) இல்லை என்று பெருமூச்சு விடத் தொடங்கினர். 


கடந்த சில நாட்களாக, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமானது. கூடவே, பல்வேறு விவாதங்கையும் உருவாக்கியது. குறிப்பாக, அவர் போதை மருந்துக்கு அடிமைபட்டு, மனநல காப்பகத்தில சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்ற அவரது வாக்குமூலம் பேசும் பொருளானது.   


இந்த வீடியோவில் என்ன உள்ளது? என்ன அர்த்தம் தருகிறது?  தனிமனிதனின் இயலாமையை, குற்றவாளியின் மனநல பாதிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுவதா? களங்கம் எற்படுத்துவதா? காவல்துறையின் இத்தகையை செயல் குற்றங்களை இயல்பாக்கி விடாதா? (Normalize) என்ற  கோணத்தில் சிலர் கருத்துக்களை முன்வைத்தனர். காவல்துறையின் இத்தகைய செயல் தலைசுற்றலைத் தருவதாகவும் வேதனை கொண்டனர். 


இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பழனிசெட்டிபட்டி போலீஸ் அதிகாரி மதனகலாவுக்கு மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார். அதிரடி நடவடிக்கையாக, இன்ஸ்பெக்டர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டார். 


இதனையடுத்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.