கொரோனா பரவலுக்கு பின்பாக இந்தியாவில் சுயசார்பு இந்தியா திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு வந்த வண்ணம் இருந்தன. இதை பயன்படுத்தி பல்வேறு வெளிநாட்டு செயலிகளுக்கு போட்டியாக இந்திய செயலிகள் உருவாகி வருகின்றன. ட்விட்டருக்கு போட்டியாக கூ செயலி, வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக சிக்னல், பப்ஜிக்கு போட்டியாக இந்திய பப்ஜி செயலி எனப் பல வெளியாகியுள்ளன. தற்போது அந்த வரிசையில் ட்ரூகாலர் செயலிக்கு போட்டியாக பாரத் காலர் என்ற புதிய செயலி வந்துள்ளது. இந்தச் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆகிய இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


பாரத் காலர் செயலி என்றால் என்ன?


பாரத் காலர் செயலி தற்போது செயல்பாட்டில் இருக்கும் ட்ரூகாலர் செயலியை போல் நம்முடைய மொபல் போனிற்கு வரும் அழைப்புகளின் நம்பர்கள் யாருடையது என்று கண்டறிய பயன்படுகிறது. இது ஒரு இந்தியாவின் காலர் ஐடி செயலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவிற்கு வெளியே சென்றால் இந்த செயலி பயன்படுத்த முடியாது. மேலும் இந்தச் செயலியில் எந்த ஒரு பயனாளரின் விவரம் அப்படியே ஸ்டோர் செய்து வைக்கப்படமாட்டது. பயனாளர்களின் தரவுகள் மற்றும் மொபைல் எண்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட பிறகு தான் இந்த செயலியில் டேட்டாவாக பதிந்து வைக்கப்படும். ஆகவே தனிநபர் தரவு பாதுகாப்பும் இந்தச் செயலியில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த செயலியை வடிவமைத்தவர்கள் யார்?


பாரத் காலர் செயலியை வடிவமைத்தவர்கள் பிரஜ்வால் சின்ஹா மற்றும் குணல் பஸ்ரிசா என்ற இரு இந்தியர்கள். இவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த தேசிய ஸ்டார்ட்அப் விருதை வென்றவர்கள். 




இந்தச் செயலி எந்தெந்த மொழிகள் உள்ளது?


பாரத் காலர் செயலி ஆங்கிலம்,இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகள் இந்தச் செயலி தயாரிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கும் ஏதுவாக அமையும். 


எதற்காக பாரத் காலர் செயலி?


ஏற்கெனவே ப்ளேஸ்டோரில் ட்ரூகாலர் இருக்கும் போது அதற்கு போட்டியாக பாரத் காலர் வடிவமைக்கப்பட முக்கிய காரணம் பாதுகாப்பு தான். ஏனென்றால் ட்ரூகாலர் செயலி மூலம் சில வேவு பார்க்கும் வேலைகள் நடைபெறுவதாக தகவல் வெளியானது. இதனால் இந்திய ராணுவ வீரர்கள் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆகவே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு காலர் ஐடி செயலி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை தற்போது இந்த பாரத் காலர் செயலி நிறைவேற்றியுள்ளது.