நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸுக்கு இரண்டு கால்களும் செயலிழந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் கெயின்ஸ். 51வயதாகும் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் இதுவரை 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்றார். இந்திய சேம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெயின்ஸ் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. 2015ம் ஆண்டில் இவர் அந்தப் புகாரில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்.
கெயின்ஸின் இதயத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் பெருந்தமணியின் உட்புறம் கிழிந்தது. பெருந்தமணி உடலின் மிக முக்கியமான ரத்த நாளம் என்பதால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பினார் எனக் கூறப்பட்டது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் கவலைக்கிடமாக இல்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதற்கிடையேதான் அவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வது என்பது முடிவானது. நேற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டு அவரது கால்கள் செயலிழந்தன. அவரது கால்களுக்குச் சிகிச்சை தர முதுகுத் தண்டுவட சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ் கெயின்ஸுக்காகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் தங்களது பிரைவசிக்கு மதிப்பளித்த நபர்களுக்கும் நன்றி என்றும் கெயின்ஸின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது 100வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த பவினா கடந்துவந்த பாதை !