புகைப்படம் எடுத்தல், ஈகிள் வியூ என சொல்லக்கூடிய பருந்து பார்வை வீடியோ எடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படும் டிரோன்கள் தற்போது இந்தியாவில் மருத்துவ விநியோகத்தில் கால் பதித்து சாதனையை நிகழ்த்தியுள்ளது . மத்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் திரோட்டில் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மருந்து விநியோகத்திற்கு ட்ரோன்களை பயன்படுத்தும் சோதனை முயற்சியை சமீபத்தில் மேற்கொண்டது. இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக  தெலுங்கானாவில் டிரோன்கள் மூலம் மருந்துகளை விநியோகிக்கும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. “மெடிசன் ஃபிரம் ஸ்கை” என அழைக்கப்படும் இந்த புதிய டிரோன்  தெலுங்கானா மாநிலம்   விகாராபாத்திலிருந்து  அருகில் உள்ள மலை கிராமத்திற்கு மருந்துகளை எடுத்துச்சென்றுள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார். உலக பொருளாதார மன்றம், என்ஐடிஐ ஆயோக் மற்றும் ஹெல்த்நெட் குளோபல் (அப்பல்லோ மருத்துவமனைகள்) ஆகியவற்றுடன்  மாநில தொழில்நுட்பத் துறை இணைந்து ”மெடிசன் ஃபிரம் ஸ்கை” டிரோனுக்கான திட்டத்தை வழிநடத்தி வருகின்றனர். 




பொதுவாக விமானம்  டேக் ஆஃப் ஆவதற்கு முன்னதாக பரிசோதிக்கப்படுவது போலவே வானிலை நிலவரம் , வெப்பநிலை, காற்றின் நிலை , ஜிபிஎஸ் உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்ட பிறகே டிரோன்கள் பறக்க அனுமதிக்கப்படுகின்றன. பறந்து சென்று தனது இலக்கை அடைந்தவுடன் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்துவிடும். அதேபோல சம்பந்தப்பட்ட  மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒடிபி ஒன்று அனுப்பப்படும் அதனை ட்ரோனில் பதிவு செய்த பிறகு, அன்லாக் செய்து மருந்துகளை டிரோன் டெலிவரி செய்கிறது. அதன் பிறகு  பறப்பதற்கான அனுமதியை கட்டுப்பாட்டு மையத்திடம் இருந்து பெற்று மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தடைகிறது.




 ”மெடிசன் ஃபிரம் ஸ்கை”  ட்ரோன்களால் 10 கிலோ அளவிலான எடையை சுமந்துக்கொண்டு 15 கிலோ மீட்டர் தூரம் வரையில் செல்ல முடியுமாம். அதிகபட்சமாக   40 கிலோ மீட்டர் தூரம் வரை  பறந்து செல்லும் திறன் இதற்கு உள்ளது.இந்த  டிரோனில் 4 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில்  10 யூனிட் இரத்தம் மற்றும் 500 தடுப்பூசிகளை எடுத்து செல்லலாமாம். அதேபோல வெறும் தடுப்பூசி மட்டும் எடுத்து செல்ல வேண்டுமானால் 2000 முதல் 3000 தடுப்பூசிகளை எடுத்து செல்ல முடியுமாம். மருந்துகளை எடுத்து செல்லும் போது குறைவான வெப்பநிலையை பெட்டிக்குள் சீராக பின்பற்றுகிறது டிரோன்.உடனடி மருத்துவ வசதிகள் தேவைப்படும் குக்கிராமங்கள், மலைவாழ் கிராமங்களில்  ”மெடிசன் ஃபிரம் ஸ்கை” டிரோன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது மருத்துவ துறையில் தடம் பதித்திருக்கும் டிரோன்கள் அடுத்தடுத்து விவசாயம், பாதுகாப்பு, போக்குவரத்து, தீயணைப்புப்படை, விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தல் போன்ற பல்வேறு பணிகளில் பயன்படுத்துவதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.