தற்போதுள்ள நிறைய முக்கிய விளையாட்டு வீரர்கள் மனநல விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக விவாதிப்பது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்ற அவர், "மன ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய உரையாடல்கள் உருவாகின்றன, இது மிகவும் நல்ல சமூகத்திற்காக எடுத்துக்காட்டு, பல உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் வெளியே வந்து மனநிலை சரியில்லை என்று வெளிப்படையாக கூறுகிறார்கள். விளையாட்டு வீரர்களும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் சில நேரங்களில் மறந்துவிடுகிறார்கள், அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் பல விஷயங்களின் அழுத்தத்தை உணர்கிறார்கள். மனநலத்தைப் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது, மக்கள் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள்" என்று குறிப்பிடுகிறார்.



டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா தனது மனநலத்தை காக்க பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒரு பெரிய தொடருக்கு பிறகு தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க அடுத்த தொடரில் இருந்து விலகியது, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பைல்ஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதி சுற்றில் இருந்து மனத்தடை காரணமாக விலகியது போன்ற சமீபத்திய எடுத்துக்காட்டுக்கள் சானியாவின் கூற்றில் பிரதிபலிக்கின்றன.


"மனநல பிரச்சினைகளை கையாள்வதில் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கென சொந்தமான வழிகள் இருப்பதாக நான் நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில், அவர்கள் வெளியில் வந்து தங்களுக்கு இருக்கும் பிரச்சனையைப் பற்றி தைரியமாக பேசுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் நல்லது, ஏனென்றால் மன நலம் உடல் நலத்தைப் போலவே முக்கியமானது, ”என்று அவர் மேலும் கூறுகிறார்.



தற்போது யுஎஸ் ஓபனுக்காக நியூயார்க்கில் இருக்கும் அவர், ’கொரானா கொடிய நோய் பரவிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் விளையாடுவது மற்றும் விளையாட்டு ரீதியிலான சுற்றுப்பயணம் மேற்கொள்வது நிச்சயமாக அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சவாலானது என்றார். "இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்வது, எப்பொழுதும் முகத்தில் மாஸ்க் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை செயல்பாடுகளால் மட்டும்தான் பயணங்கள் மேற்கொள்ள முடிகிறது, இந்த நியூ நார்மல் வாழ்க்கை வித்தியாசமாகத்தான் இருக்கிறது." என்ற சானியா அவரது சுற்றுப்பயணங்களில் அவருடன் அவரது இரண்டு வயது மகன் இஷானையும் கூட்டிச் செல்கிறார். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு குழந்தையுடன் பயணம் செய்வது அதை விட அதிகம் சவாலானது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். "இதே நிலையில் இருப்பது கடினம்தான், ஆனாலும் இந்த நேரத்தில் விளையாடுவதற்காக உலகைச் சுற்றுவது எங்களுக்கு மட்டும் கிடைத்த பாக்கியம்" என்று கூறி முடிக்கிறார்.