நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியை, இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
மகிழ்ச்சியில் இந்திய அணி ரசிகர்கள்:
இந்திய அணி வெற்றி பெற்றது, இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் , இந்திய அணியின் பக்கம் ஆட்டம் சாதகமாக இருந்த நிலையில், சில நிமிடங்களில் தென்னாப்பரிக்கா வசம் ஆட்டம் சென்றது. இதையடுத்து, சோகமாக இருந்த இந்திய ரசிகர்களை, பும்ரா மற்றும் பாண்டியாவின் பவுலிங்கின் பந்துவீச்சு மாற்றியது. இதையடுத்து, இந்திய அணியின் பக்கம் ஆட்டம் மாறத் தொடங்கியது. கடைசிவரை ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற நிலையில் , இந்திய அணி வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி வெற்றியால், இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற்றமைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொழில்நுட்ப உலகின் வல்லவரான கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
அவர் X பக்கத்தில் தெரிவித்ததாவது
என்ன ஒரு ஆட்டம், அற்புதம்! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் இதற்கு மிகவும் தகுதியுடையவர்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பயனர் ஒருவர் தெரிவித்திருந்ததாவது, நான் போட்டியைப் பார்க்கவில்லை என்றால், இந்தியா எப்போதும் வெற்றி பெறும். இந்த முறையும் பார்க்காமல் தியாகம் செய்தேன். நான் என்ன செய்வேன் சுந்தர்? என பதிவிட்டிருந்தார்.
அதற்கு சுந்தர் பிச்சை, போட்டியை காணாமல் இருந்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுகளானது, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.