சமீபத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு குழந்தைகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்க தொடங்கியது முதல் அவர்கள் ஆன்லைன் செயல்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு இருக்கும் பல ஆபத்துகள் சரியாக புரியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 


அப்படி உங்களுடைய குழந்தைகள் ஆன்லைனில் போலி கணக்குகளிடம் சிக்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?


பொதுவாக சமூக வலைதளங்களில் சிலர் போலியாக கணக்குகளை தொடங்கி அதில் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோரை தங்களது வலையில் விழ வைத்து மோசடியில் ஈடுபடுவார்கள். ஆங்கிலத்தில் இந்த முறைக்கு கேட் ஃபிசிங் என்று கூறப்படும். இந்த வகையான மோசடியில் இருந்து உங்களுடைய குழந்தைகளை பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டியது:


கவனமாக நண்பர்களை சேர்க்க வேண்டும்:


முதலில் உங்களுடைய குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களில் நண்பர்களை கவனமாக சேர்க்க அறிவுரை வழங்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு நேரில் தெரியாத நபர்களிடம் இருந்து நண்பர்கள் கோரிக்கை வந்தால் அதை நிராகரிக்க சொல்ல வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பில் மிகவும் முக்கியமான ஒன்று. 


கணக்கை பாதுகாப்பாக மாற்றுதல்:


உங்களுடைய குழந்தை ஒருவேளை தங்களுடைய கணக்கில் உள்ள படங்களை பொதுவெளியில் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்திருந்தால் அதை மாற்ற வேண்டும். இதற்கு அந்த கணக்கின் தரவு பாதுகாப்பு (பிரைவசி) விருப்பங்களில் பிரைவேட் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். 




பயனில்லாத கணக்கை அழிக்க வேண்டும்:


ஒருவேளை உங்களுடைய குழந்தைகள் முன்பாக ஒரு கணக்கை பயன்படுத்திவிட்டு தற்போது அதை பயன்படுத்தாமல் இருந்தாலும் அதற்கு சில பிரச்னைகள் வரும். அதில் இருக்கும் படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து சிலர் போலி கணக்கு தொடங்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பயன்படுத்தாத கணக்குகளை முதலில் அழிக்க வேண்டும். 


உங்களுடைய குழந்தையின் பெயரில் போலி கணக்கு உள்ளதா:


உங்களுடைய குழந்தையின் பெயர் அல்லது போட்டோவை பயன்படுத்தி யாராவது போலி கணக்கு தொடங்கியுள்ளனாரா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி இந்த சோதனையை செய்து அப்படி எதாவது கணக்கு இருந்தால் அதை முடக்கம் செய்ய வேண்டிய முயற்சிகளை எடுங்கள். 


குழந்தைகளின் சமூக வலைதள கணக்கை கவனிக்க வேண்டும்:


உங்களுடைய குழந்தைகள் சமூக வலைதள கணக்குகள் வைத்திருந்தால் முடிந்தவரை அவர்களுடன் நண்பராக இருங்கள். அத்துடன் அவர்களுடைய சமூக வலைதள நண்பர்கள் பட்டியல் குறித்தும் தெரிந்து வைத்து கொள்வது நல்லது. 




ட்விட்டர் தளத்தில் முக்கியமான படங்களை போடக்கூடாது:


ட்விட்டர் தளத்தில் ஒரு கணக்கில் போட்டோ பதிவிடும் பட்சத்தில் அதை யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளும் வகையில் தற்போது இருக்கிறது. அதிலும் உங்களுடைய கணக்கு பாதுகாக்கபட்ட கணக்காக இருந்தால் மட்டுமே படங்களை எடுக்க முடியாது. ஆனால் அதிலும் நீங்கள் அனுமதிக்கும் ஃபாலோவர்ஸ் படத்தை எடுத்து கொள்ளலாம். ஆகவே ட்விட்டர் தளத்தில் முடிந்தவரை படங்களை பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். 


இவ்வாறு மேற்கூறப்பட்டுள்ள சில டிப்ஸை உங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் பயன்பாட்டின் போது நீங்கள் நிச்சயம் கடைபிடிப்பது அவசியம். அப்படி செய்யும் பட்சத்தில் உங்களுடைய குழந்தைகள் போலி கணக்குகளில் சிக்குவதை தடுக்கலாம். 


மேலும் படிக்க:எந்தெந்த நாடுகளில் எவ்வளவு விலைக்கு வாங்கலாம்... எப்போது வாங்கலாம்?