Tirupati Darshan Tickets Whatsapp: திருப்பதி ஏழுமலையான் கோயில் சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட்டை, வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகள் படிப்படியாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயில்:


கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் பயணத்தையும், சுவாமி தரிசனத்தையும் எளிதாக்கும் நோக்கில் தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசு, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், , வாட்ஸ்அப் செயலியில் 'மன மித்ரா' சேவை மூலம் டிஜிட்டல் வசதியை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பக்தர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி, ஏழுமலையானை தரிசிப்பதாற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய முடியும்.



மன்மித்ரா சேவை:


'மன மித்ரா' திட்டத்தின் கீழ்  திருப்பதி, விஜயவாடாவின் துர்கா மல்லேஸ்வர சுவாமி, ஸ்ரீசைலம், ஸ்ரீகாளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம் மற்றும் துவாரகா திருமலை கோயில்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் உட்பட பல கோயில் சேவைகள் வாட்ஸ்அப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை பக்தர்களின் பயண அனுபவத்தை எளிதாக்குவதையும், கோயில் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


வாட்ஸ்-அப் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி?


திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்வது இப்போது எளிதானது. அதற்கான வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 



  • மனா மித்ராவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை செல்போனில் சேமியுங்கள்: 9552300009

  • அந்த எண்ணுக்கு 'ஹாய்' என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பவும்

  • கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து 'கோயில் முன்பதிவு சேவைகள்' என்பதைத் தேர்ந்தெடுங்கள்

  • தரிசன டிக்கெட்டுகள் கிடைப்பது குறித்த விவரங்களை சாட்பாட் வழங்கும்

  • அறிவுறுத்தப்பட்டபடி பணம் செலுத்தும் செயல்முறையைத் தொடரவும்

  • பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்ததும், உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் இ- டிக்கெட் அனுப்பப்படும்

  • கோயில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அச்சிடுங்கள்


கூடுதல் சேவைகள்:


தரிசன டிக்கெட் முன்பதிவு தவிர, 'மன மித்ரா' சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும் ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி



  • கோயிலில் தங்குவதற்கான அறை முன்பதிவுகள்.

  • கோயில் அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள்.

  • ரயில் டிக்கெட் முன்பதிவுகள் (மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது) போன்ற சேவைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


எதிர்கால திட்டங்கள்:


ஜனவரி 30, 2025 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, 'மன மித்ரா' வாட்ஸ்அப் சேவைகள் மூலம் 2.64 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கான அணுகலை மேம்படுத்த அடுத்த 45 நாட்களுக்குள் 161 கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சி, கோயில் வருகைகளை மிகவும் வசதியாகவும், திறமையாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. குறிப்பாக நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் பக்தர்கள், வாட்ஸ்அப்பில் ஒரு சில தொடுதல் மூலமே இப்போது ஆன்மீக பயணத்தை எளிதாக திட்டமிடலாம்.