Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 18 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 பேர் உயிரிழப்பு:
சனிக்கிழமை இரவு புது டெல்லி ரயில் நிலையத்தில், மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்லும் ரயில்களுக்காக பயணிகள் காத்திருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உத்தரபிரதேசம் செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது இரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் 4 குழந்தைகள், 11 பெண்கள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பபர்களின் சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை தினம் காரணமாக கும்பமேளாவிற்கு செல்ல ஒரே நேரத்தில் அதிகப்படியான பயணிகள் ரயில் நிலையத்தில் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடரும் உயிரிழப்புகள்:
முன்னதாக, கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். அதோடு, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கும்பமேளாவில் புனித நீராட பொதுமக்கள் பிரயாக்ராஜை நோக்கி பயணிக்கின்றனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாகவும் பலர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் கூட, கும்பமேளாவில் பங்கேற்பதற்காக வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தொடரும் குற்றச்சாட்டுகள்:
மகாகும்பமேளாவில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் போதுமான ரயில்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அண்மையில், ஏசி பெட்டியிலும், முன்பதிவு பெட்டிகளிலும் கதவுகளை உடைத்துக்கொண்டு பொதுமக்கள் உள்ளே நுழையும் வீடியோ இணையத்தில் வைரலானது. ரயில் லோகோ பைலட்டையே அடித்து வெளியேறிவிட்டு பயணிகள் அதில் நுழைந்த சம்பவமும் அரங்கேறியது. காசி தமிழ் சங்கமத்திற்காக, தமிழ்நாட்டில் இருந்து சென்ற பயணிகளையும் வடநாட்டு பயணிகள் தாக்கியதும் அண்மையில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு, கோடிக்கணக்கானோர் பங்கேற்கும் கும்பமேளாவிற்கு தேவையான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பிரதமர் மோடி இரங்கல்
இதனிடையே, பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் துயரமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.