கருத்து பரிமாற்றத்துக்கான தளமாக பேஸ்புக், ட்விட்டரும், புகைப்படங்களுக்கான சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராமும், வீடியோக்களுக்கான தளமாக யூடியூப், டிக் டாக் போன்றவை மக்களிடையே பயன்பாட்டில் இருந்து வருகிறது.


இந்த சூழலில்தான் டைப்பிங் செய்து அழுத்துப் போனவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் ஆடியோவுக்கான சமூக வலைதளமாக கிளப் ஹவுஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் குழுமங்களாக இணைந்து உரையாடி வருகின்றனர். கிளப் ஹவுசுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் ஸ்பேசஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதிலும் பயனாளர்கள் பேசி வருகின்றனர்.


இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ஆம்டெக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஹூட் (HOOTE) என்ற் பெயரில் ஆடியோவுக்கான சமூக வலைதள செயலியை தொடங்கி இருக்கிறார். இதனை நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ரஜினிகாந்த், குரலை அடிப்படையாக கொண்ட சமூக வலைதளத்தை இந்தியாவில் இருந்து உலக மக்களுக்காக அறிமுகம் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.


இந்த செயலியை அறிமுகம் செய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ”ஹூட் செயலி மூலம் 60 வினாடி கொண்ட ஆடியோவை பதிவு செய்யவும் பதிவேற்றம் செய்யவும் முடியும். இந்த செயலியின் மூலம் மக்கள் தங்கள் குரல் மூலமாக கருத்துக்களை, யோசனைகளை, விருப்பங்களை தெரிவிக்கலாம். சமூக வலைதளங்களின் எதிர்காலம் குரல் தான் என்பதை உறுதியாக நம்புகிறேன்.” என குறிப்பிட்டு உள்ளார்.


 


இந்த செயலி குறித்து சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவிக்கையில், ”எந்த மொழிகளில் வேண்டுமானாலும் பயனர்கள் தங்கள் குரல் வழி கருத்துக்களை பகிர முடியும். மக்களின் கவனிப்பு திறன் குறைந்து வருகிறது. எனவே 60 வினாடிகளுக்குள் தேவையாக தகவலை பேசி அனுப்பும் வசதியை இதில் வழங்கி இருக்கிறோம்.” எனக்குறிப்பிட்டு உள்ளார்.


ஹூட் செயலியின் சிறப்பம்சங்கள்:



  1. பேசும் ஆடியோவின் பின்னணியில் இசையை சேர்த்து வெளியிடும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

  2. நமது விருப்ப மொழியை தேர்வு செய்து ஆடியோக்களை கேட்கலாம்.

  3. பேஸ்புக் போல் ஆடியோக்களை லைக் செய்யவும், பகிரவும், கருத்திடவும் முடியும்.

  4. குரல் பதிவுகளுடன் புகைப்படத்தையும் இணைக்க முடியும்.

  5. பிரபலங்களை பின் தொடர்ந்து அவர்களின் பதிவுகளை கேட்க முடியும்.


ஆண்டிராய்டு மற்று ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இந்த ஹூட் செயலி வெளியாகி உள்ளது. ஆண்டிராய்டு ப்ளே ஸ்டோரில் 50 எம்.பி. அளவிலும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் 140.8. எம்.பி. என்ற அளவிலும் ஹூட் செயலி கிடைக்கிறது. ஆண்டிராய்டில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர். செயலி குறித்து 267 பேர் கருத்திட்டு இருக்கிறார்கள். இதுவரை 5க்கு 4.7 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்து உள்ளன. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 5 ஸ்டார் ரேட்டிங்குகள் கிடைத்துள்ளன.


செயலியில் வழங்கப்பட்டு உள்ள வசதிகள் தனித்துவமானதாகவும், எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு இருப்பதாகவும் பெரும்பாலானோர் கருத்திட்டு உள்ளனர். அதே நேரம் இதை பயன்படுத்தி வதந்தி, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு கருத்துக்களை தடுக்க என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்தும், பயனர்களின் தகவல்களை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.