டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்து உள்ளார். 


துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடர் எளிதான ஒன்றாக தங்கள் அணிக்கு மாறி விடாது என அவர் தெரிவித்து இருக்கிறார்.


இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்சுக்கு பேட்டி அளித்த அவர், ”இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வெற்றிபெற்று விட்டதால் இத்தொடரை நாங்கள் எளிதான ஒன்றாக கருதவில்லை. இந்த போட்டியில் கிடைத்த வெற்றியால் எங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது. அந்த தன்னம்பிக்கையின் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். இத்தொடரில் எங்கள் இலக்கை அடைய நீண்ட தூரம் இருக்கிறது. அதை நோக்கி பயணிக்க இருக்கிறோம். நாங்கள் நன்றாக பயிற்சி செய்தோம். வரலாற்றை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு விளையாடினோம்.” என்றார்.



தொடர்ந்து பேசிய பாபர் அசாம், ”எங்களுக்கு கூடுதலாக திறன்மிக்க பயிற்சி தேவைப்பட்டது. ஏராளமான பயிற்சி ஆட்டங்களை விளையாட நினைத்தோம். உள்நாட்டு போட்டிகளில் அதிகம் விளையாடினோம். அது எங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்தது.” என்றார்.


இந்தியாவுக்கு எதிராக டி20 உலகக்கோப்பை தொடரில் பெற்ற வெற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தது என பாபர் அசாம் தெரிவித்து உள்ளார். ”தொடக்கத்திலேயே இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது. எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். போட்டிக்கு முன்பாக நாங்கள் வகுத்த திட்டங்களை ஆட்டத்தில் செயல்படுத்தினோம். அதற்கு விடையாக வெற்றி கிடைத்து உள்ளது.” என நெகிழ்ந்தார் பாபர் அசாம்.


“தொடக்க வீரர்களாக களமிறங்கிய நானும் ரிஜ்வானும் பார்ட்னர்ஷிப்பை உடைவிடாமல் ரன்களை சேர்க்க முயன்றோம். நாங்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். அதை செய்து காட்டினோம். வெற்றி கிடைத்து உள்ளது.” என பாபர் அசாம் தெரிவித்து உள்ளார்.


டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணி தொடக்க வரிசையை சரித்தது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஷாஹின் அப்ரிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. கேப்டன் விராட் கோலி மட்டும் பொறுப்புடன் அடி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். அவரும் ஷாஹின் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை சேர்த்தது.


அடுத்து களமிறங்கி பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் – விக்கெட் கீப்பர் ரிஜ்வான் இணை இந்தியாவின் பந்துவீச்சை பதம் பார்த்தது. இருவரையும் ஆட்டமிழக்க வைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. முடிவில் அந்த அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பை தொடர்களில் முதல்முறையாக இந்தியாவை வீழ்த்தியது.