டெலிகிராம் நிறுவனர், பாவெல் துரோவ், வாட்ஸ்அப் பாதுகாப்பானது இல்லை என்றும் பல நிறுவனங்கள் அதனை கண்காணிப்புக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அதிர்ச்சிகர கூற்றை முன்வைத்துள்ளார்.


டெலிகிராம் நிறுவனர் குற்றச்சாட்டு


நீங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தினால், உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தரவையும் ஹேக்கர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவில் துரோவ் கடந்த வாரம் பரவலாகப் புகாரளிக்கப்பட்ட முக்கியமான வாட்ஸ்அப் சம்மந்தப்பட்ட பாதிப்பைக் குறிப்பிடுகிறார். வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் காரணமாக ஹேக்கர்களால் எளிதில் ஒரு விடியோ அனுப்பியோ, விடியோ கால் செய்தோ உங்கள் மொபைலை ஹேக் செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பிரச்சனைக்கு வாட்ஸ்அப் ஒரு தீர்வை வழங்கியுள்ளது, ஆனால் அது உதவ வாய்ப்பில்லை என்றும் துரோவ் கூறுகிறார்.



தொடர்ந்து வரும் அதே பிரச்சனை


இதற்கு முன்பு 2017, 2018, 2019 மற்றும் 2020 இல் இதே போன்ற சிக்கல்களை வாட்ஸ்அப் சரிசெய்ததற்கான ஆதாரத்தை அவர் பகிர்ந்துள்ளார். இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் அதே பிரச்சனை வருகிறது என்று கூறியுள்ளார். இந்த தொடர்ச்சியான சிக்கல்கள் அனைத்தும் வாட்ஸ்அப் பாதுகாப்பானது அல்ல என்று நமக்கு காட்டுகின்றன என்று கூறிய அவர், இந்த குறைபாடுகள் ஹேக்கர்கள் மொபைலை அணுகுவதற்கு கதவுகளைத் திறந்து விடுகின்றன என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


டெலிகிராமை பயன்படுத்துவதற்காக சொல்லவில்லை


இந்த பிரச்சனைகள் அனைத்தையும் முன்னிலைப்படுத்தி, டெலிகிராம் நிறுவனர் துரோவ் இந்த காரணங்களால் பல ஆண்டுகளுக்கு முன்னரே தான் தனது மொபைலில் இருந்து வாட்ஸ்அப்பை நீக்கிவிட்டதாக கூறுகிறார். தான் டெலிகிராமை பயன்படுத்துவற்காக இதனை சொல்லவில்லை என்று கூறிய அவர் பக்க சார்பற்று பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக பேசுவதாக கூறினார்.



டெலிகிராம் vs வாட்ஸ்அப்


டெலிகிராமில் ஏற்கனவே 70 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாகக் கூறும் துரோவ், ”எதை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். ஆனால் வாட்ஸ்அப்பில் இருந்து சற்று தள்ளியே இருங்கள்” என்று கூறி பதிவிட்டுள்ளார். துரோவ் இதுபோன்ற கூற்றுக்களை முன்வைப்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பிரச்சனைகள் இருப்பதை வெளியில் தெரியப்படுத்திக் கொண்டுதான் உள்ளார். வாட்ஸ்அப் உலகெங்கிலும் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது பலரை பாதிக்கும் விஷயம். மேலும் மெட்டாவுக்கு சொந்தமான இயங்குதளமான வாட்ஸ்அப்பில் குறைகள் உள்ளன என்பதை அவர்கள் உணர வேண்டும். இல்லையென்றால் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் தரவுகளை இழக்க நேரிடலாம், அல்லது மொபைலின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். டெலிகிராமும் பிரபலமாகதான் உள்ளது, ஆனால் வாட்ஸ்அப் சில பிரச்சனைகளில் சிக்கும் போதெல்லாம் முன்னாள் வந்து நான் இருக்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறதே தவிர தொடர்ந்து பயனர்களை பயன்படுத்த வைக்கும் அளவிலான செயல்பாடுகள் இல்லை.


எனினும், அனைத்து பயனர்களுக்கும் அணுகக்கூடிய மற்றும் பயன்படுத்த எளிதான இந்த இரண்டு மெசெஞ்சர் செயலிகளையும் ஒப்பிட்டால், வாட்ஸ்அப் மைல்கள் முன்னால் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறார்கள் டெக் சேவீஸ்..