உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களின் கணக்குகளை கொண்ட கூகுள், கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, இந்த கொள்கை மூலம் இமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் நீக்கப்படும் என்றும், இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹேக் உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
நீக்கம் என்றால் எப்படி..?
குறைந்தது 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத அல்லது உள்நுழையாமல் இருக்கும் தனிப்பட்ட கணக்குகள் நீக்கப்பட இருக்கின்றன. உதாரணமாக, Google Workspace (Gmail, Docs, Drive, Meet, Calendar), YouTube மற்றும் Google Photos ஆகியவற்றில் உள்ள செயலற்ற கணக்குகள் நீக்கப்பட இருக்கின்றன.
நேற்று முதல் இந்த கொள்கை அமலுக்கு வந்தாலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் முதல் கணக்குகள் நீக்கம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கூகுள் நிறுவனத்தில் துணை தலைவர் ரூத் கிரிசெலி வெளியிட்ட அறிக்கையில், “ இந்த கொள்கையானது தனிப்பட்ட கூகுள் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். பள்ளிகள் அல்லது வணிக நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. ஒரு கூகுள் கணக்கு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படாவிட்டால் அது ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கணக்கு இருந்ததையே மறந்துவிட்ட அல்லது கவனிக்கப்படாத கணக்குகள் பெரும்பாலும் பாஸ்வேர்டுகளை நம்பியிருக்கும். அப்போது அவை ஹேக் செய்யப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம். அதன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
பெரும்பாலான பயனர்கள் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் முறையில் தங்களது கணக்குகளை பாதுகாப்பது இல்லை. இப்படியான கணக்குகள் 10 மடங்கு குறைவாக உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக, கணக்குகள் எளிதாக ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், ஹேக் மற்ரும் ஸ்பேம் போன்ற தேவையற்றவையால் உங்களது தகவல்களை திருடி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பு: ஒரு கணக்கை நீக்கும் முன், உங்களது மெயில் ஐடிக்கு பல அறிவிப்புகள் அனுப்பப்படும்.