செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13 தேதி, போலி மதுபானம் ( கள்ளச்சாராயம் கலந்து தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் எனக்கு கூறப்படுகிறது ) குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்தநிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) , ஜம்பு (60), முத்து (64) ஆகிய மூவர் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். உயிரிழந்ததை குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத காட்சிகள் காண்போர் மனதை உருக வைத்து.
இரண்டு வழக்குகள் பதிவு
இது தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்து , விசாரணை மேற்கொண்ட போலீசார், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பணி நீக்கம் மற்றும் பணி மாற்றம்
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவை சேர்ந்த செங்கல்பட்டு துணைக் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் புகார்
இந்த நிலையில் உயிரிழந்த வென்னியப்பன் மகள் தேவி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் உயிரிழந்த தனது உறவினர்கள் மற்றும் தாய் தந்தை உடல்களை, உறவினர்கள் வருவதற்குள் அடக்கம் செய்து விட்டதாகவும், உடலை தோண்டி எடுத்து மறு உடல் கூராய்வு மேற்கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் மனு அளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்