கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும் என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில், கூகுள் திங்கள்கிழமை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி கொரோனா தொடர்பான தகவல்களைத் தேடுவோருக்கு புதுப்புதுத் தகவல்களைத் தரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 

மேலும், கூகுள் மேப்ஸில் புதிய வசதிகளைப் புகுத்துவது தொடர்பான சோதனைகளையும் அந்நிறுவனம் செய்துவருகிறது. இதனால், மருத்துவமனையில் இருக்கும் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட படுக்கை வசதிகள், தடுப்பூசி விவரம் ஆகியனவற்றை இனி கூகுள் தேடலில் பெறலாம். இதுதவிர, கிவ்இந்தியா, சேரிட்டீஸ் எய்ட் ஃபவுண்டேஷன், கூன் ஜெ, யுனைடட் வே ஆஃப் மும்பை ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கூகுள் நிதி திரட்டித் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

புதிய வசதிகள் என்னென்ன?

 

இந்தியாவிலிருந்து கூகுளில் கொரோனா தடுப்பூசி விவரம் கோருபவர்களுக்கு அவர்கள் கேட்கும் விவரத்தை அளிப்பதோடு, தடுப்பூசியின் செயலாற்றல், தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள், தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் குறித்து தெரிவிக்கின்றது. அத்துடன் அரசாங்கத்தின் கோவின் CoWIN இணையதளத்துக்கும் இட்டுச்செல்கிறது. இதனால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பயனாளர்கள் பதிவுசெய்ய வழிவகை செய்யப்படுகிறது.

 

தடுப்பூசி தொடர்பான தகவல்களுடன் கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி, இந்த மோசமான நோய்க்கான மருத்துவம் என்ன என்பது பற்றி இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் தரும் தகவல்களைத் தருகிறது. கடந்த ஆண்டு கூகுள், கொரோனா பரிசோதனை மையங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் கூகுள் மேப்ஸை மேம்படுத்தி அருகாமை பரிசோதனை மையங்களை அடையாளம் காட்டியது. தற்போது தடுப்பூசி தொடர்பான தகவல்களை இந்த முறையைப் பின்பற்றித் தருகிறது.

 


 

அண்மையில், இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் பெருமளவில் பேசப்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்த்தது. இத்துடன் யூடியூப் இந்தியா சேனலில், கொரோனா தொடர்பான சில தேர்வு செய்யப்பட்ட வீடியோக்களின் ப்ளே லிஸ்ட்களையும் கூகுள் ஒருங்கிணைத்திருக்கிறது. இதில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வீடியோக்கள் இடம்பெறுவதால் மக்கள் தங்களின் சந்தேகங்களுக்கு உரிய, தெளிவான, உண்மையான விளக்கத்தைப் பெற இயலும். கூகுள் செர்ச், கூகுள் மேப்ஸில் நாடு முழுவதும் உள்ள 23,000 தடுப்பூசி மையங்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் 8 இந்திய மொழிகளில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

 


 

இதுதவிர, கூகுள் மேப்ஸில் Q&A சேவையையும் இடம்பெறச் செய்வது குறித்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மக்கள் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவை குறித்த தகவல்களை தங்களின் இடம் சார்ந்து பகிர்ந்து கொள்ள முடியும். இருப்பினும், இந்தத் தகவல்கள் மட்டும் பயனாளிகளால் பதிவேற்றப்படுபவை என்பதால் எச்சரிக்கை தேவை என்றும் கூகுள் கூறுகிறது.

 

இவைதவிர கூடுதலாக, கூகுள் நன்கொடை பிரச்சாரம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளது. இந்தப் பிரச்சாரம் மூலம் இந்தியாவில் உள்ள கிவ்இந்தியா, சேரிட்டீஸ் எய்ட் ஃபவுண்டேஷன், கூன் ஜெ, யுனைடட் வே ஆஃப் மும்பை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டப்படுகிறது. இதுவரை இந்திய மதிப்பில் ரூ.33 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கூகுள் பே பயன்பாட்டாளர்களுக்கான நன்கொடை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.