நடிகை கீர்த்தி சுரேஷூக்கு விமர்சன ரீதியாக பெரிய பெயரை வாங்கி கொடுத்த திரைப்படம் 'மகாநடி'. இந்தப் படத்தில் நடிகை சாவித்திரியின் கேரக்டரில் நடித்ததின் விளைவாக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸான இப்படத்தில் கீர்த்தியின் சுரேஷை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் பாராட்டினர். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் கீர்த்தி சுரேஷைத் தவிர்த்து, நடிகர் ஜெமினி கணேஷன் கேரக்டரில் துல்கர் சல்மானும் நடித்திருந்தார். 



விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இப்படம் ரிலீஸாகி மூன்று வருடங்களான நிலையில் படம்குறித்த முக்கியமான நிகழ்வு ஒன்றை கீர்த்தி தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அதாவது, இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தன்னிடம் கதைசொல்ல வந்தபோதுதான் கேட்கநினைக்கும் கேள்விகளை கேட்பதற்காக கீர்த்தி ஒரு பேப்பரில் குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார். இந்தக் குறிப்பு பேப்பரை தற்போது கீர்த்தி சமூகவலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். 

 


இதில் கீர்த்தி, 'மது அருந்தும் காட்சியை எப்படி எடுக்கப் போறீங்க..? வயதான கதாபாத்திரம் படத்தில் எவ்வளவு நேரம்..? கர்ப்பமான தோற்றம் இருக்கிறதா, எடை கூடுவது இழப்பது அவசியமா..? போன்ற கேள்விகளெல்லாம் இடம் பெற்றிருந்தன. இதை சமீபத்தில் சமூகவலைதளத்தில் பதிவு செய்து நாக் அஸ்வினை குறிப்பிட்டு, 'நாகி எதை நான் தேடிப் பிடித்திருக்கிறேன் பாருங்கள்! நீங்கள் கதை சொல்லும் போது முதன்முதலில் நான் எழுதிய குறிப்புகள். என்னவொரு அற்புதமான பயணமாக இருந்தது'' என்று எழுதி சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .