நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா பரவலுக்கும் 5G மொபைல் கோபுர பரிசோதனைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. காட்டுத் தீயைக் கூட கட்டுப்படுத்திவிடலாம் ஆனால் சமூகவலைதள வைரல் விஷயங்களை எந்த மூடிபோட்டும் மூடமுடியாது. கொரோனா உலகை அச்சுறுத்த ஆரம்பித்த நாள் முதலே ஃபேஸ்புக், வாட்ஸ் அப் இன்னும் இத்யாதி இத்யாதி சமூக வலைதளங்களில் கொரோனா சார்ந்த விஷயமில்லாத நாளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அன்றாடம் ஏதேனும் விஷயம் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலானவை அச்சுறுத்தும் தொனியிலேயே அமைந்துவிடுகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது 5ஜி மொபைல் டவர்கள் அமைப்பதாலேயே இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது எனும் விஷம விஷயம். இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய தொலைதொடர்புகள் துறை  (Department of Telecommunications DoT) விளக்கமளித்திருக்கிறது.

 

அதில் கூறப்பட்டிருப்பதாவது, “சமூகவலைதளங்களில் பரவலாக ஒரு விஷயம் பகிரப்பட்டு வருகிறது. 5ஜி மொபைல் கோபுரங்களை அமைத்து நடத்தப்படும் சோதனைகளாலேயே கொரோனா வேகமாகப் பரவுவதாக தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. இதில் எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லை. 5-ஆம் தலைமுறை அலைக்கற்றைக்கும் கொரோனா பரவலுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இப்படியான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 

மேலும், 5ஜி நெட்வொர்க் பரிசோதனைப் பணிகள் இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை. ஆகையால் 5ஜி மொபைல் கோபுர பரிசோதனையால் கொரோனா பரவுவதாக வெளியாகும் தகவலே அடிப்படை ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மொபைல் கோபுரங்களானவை அயனியாக்கம் செய்யாத ரேடியோ அலைவரிசைகளையே வெளியேற்றுகின்றன. அவற்றின் வீரியம் மிகமிகக் குறைவு. அதனால், அவற்றால் மனித உடலின் உயிர் செல்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்த இயலாது. மத்திய தொலைதொடர்புகள் துறை அனுமதித்துள்ள பேஸ் ஸ்டேஷன் ரேடியோ அலைவரிசை வெளியேற்றுதல் அளவானது சர்வதேச ஒழுங்குமுறை ஆணையங்களின் விதிமுறைகளைவிட 10 மடங்கு மிகக் கடுமையானவையாகும். 

 

இந்தியாவில் இயங்கும் செல்ஃபோன் சேவை நிறுவனங்களும் இதனை முறையாகக் கடைபிடிக்கின்றன. அதனை உறுதி செய்யவும் எங்களிடம் சீரான நடைமுறை இருக்கிறது. இருப்பினும், எந்த ஒரு குடிமகனுக்காவது மொபைல் கோபுரங்களில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக ரேடியோ அலைவரிசை வெளியேறுவதாக சந்தேகம் இருக்குமேயானால், அவர்கள் https://tarangsanchar.gov.in/emfportal என்ற இணையதளம் வாயிலாக கோரிக்கை மனு அளித்து சம்பந்தப்பட்ட செல்ஃபோன் கோபுரத்தை பரிசோதனைக்கு உட்படுத்தலாம். 

 

பொதுவாகவே செல்ஃபோன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் அலைவரிசை தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.