கூகுள் நிறுவனம் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி பிக்சல் 7 ஸ்மார்ட்போன் மற்றும் அதன் முதல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் ஈவென்ட்:
Alphabet Inc க்கு சொந்தமான கூகுள் நிறுவனம் பிக்சல் என்னும் பெயரிலான ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்தி வருகிறது. மொபைல் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் கூட அடுத்தடுத்த பிக்சல் சீரிஸ் மொபைல்கள் மூலமாக தனக்கென தனி பயனாளர்களை வைத்துள்ளது கூகுள். இந்த நிலையில் பிக்சல் மொபைலின் அடுத்த சீரிஸான பிக்சல் 7 ஸ்மார்ட்போன்களை வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தனது GoogleStore.com ஆர்டிக்கள் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் மொபைலுடன் கூகுள் தனது முதல் ஸ்மார்ட் வாட்ச்சினையும் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. கூகுள் சாதனங்களின் வெளியீட்டு நிகழ்வு நியூயார்க்கில் உள்ள வில்லியம்ஸ்பர்க் சுற்றுப்புறத்தில் காலை 10 மணிக்கு ET (2 pm GMT) மணிக்கு நடைபெறவுள்ளது. கூகுள் மே மாதம் அதன் I/O நிகழ்வின் போது பிக்சல் 7 ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் வாட்ச் பற்றிய ஸ்னீக் பீக் ஒன்றை வெளியிட்டிருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.
முதல் கூகுள் ஸ்மார்ட்வாட்ச்:
கூகுள் வாட்ச் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “முதல் முறையாக கூகுளின் உதவி மற்றும் ஃபிட்பிட்டின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி நிபுணத்துவத்தை ஒன்றாகக் கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் புதிய, மறுவடிவமைக்கப்பட்ட WearOS அனுபவத்தில் வழங்கப்பட்டுள்ளன, மேலும் அனைத்து பிக்சல் மற்றும் ஆண்ட்ராய்டு ஃபோன்களிலும், பிக்சல் பட்ஸ் புரோ மற்றும் பிக்சல் பட்ஸ் ஏ-சீரிஸ் வயர்லெஸ் இயர்பட்களிலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளது.
பிக்சல் 7 வசதிகள் :
வரவிருக்கும் பிக்சல் 7 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் மற்றும் டென்சர் எனப்படும் கூகுளின் தனிப்பயன் மொபைல் சிப்பின் சமீபத்திய மறு செய்கையைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் ஆகியவற்றோடு சேர்த்து Nest ஸ்மார்ட் ஹோம் போர்ட்ஃபோலியோவையும் அறிமுகப்படுத்தவுள்ளது. அக்டோபர் மாதம் அறிமுகமாகவுள்ள அனைத்து சாதனங்களையும் வாங்க விரும்புபவர்கள் googleStore.com இல் ஷாப்பிங் செய்துக்கொள்ளலாம் . அல்லது நீங்கள் நியூயார்க் நகரப் பகுதியில் இருந்தால் நேரடியாக Google Stores ஐ விசிட் செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியை காண விரும்புவர்கள் GoogleStore.com/events என்னும் வலைத்தள பக்கங்களில் லைவ் ஸ்டிரீமிங்கில் பங்கேற்காலம் . அறிமுகமாகும் சாதனங்கள் குறித்த விவரங்களை @madebygoogle என்னும் பக்கம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.