Em magan movie released date today : தூக்கு போடு செத்தாலே சாந்தி... வடிவேலு காமெடி ஞாபகம் இருக்கிறதா... எம் மகன் வெளியாகிய நாள் இன்று
தந்தை - மகன் இடையே இருக்கும் உறவு குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் ஒரு தந்தை மகனிடம் எப்படி கடுமையாக இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வந்த திரைப்படம் எம் மகன். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்றைய தேதியில் வெளியானது. நகைச்சுவை, காதல் கலந்த குடும்ப படமாக இது இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமாக வெற்றிபெற்றது.
சிறந்த படத்திற்கான விருது:
இயக்குனர் திருமுருகன் இயக்கிய இப்படத்தில் பரத், கோபிகா, நாசர், சரண்யா பொன்வண்ணன், வடிவேலு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். முதலில் இப்படத்திற்கு எம்டன் மகன் என்று பெயரிடப்பட்டது. பிறகு அதை சுருக்கி எம் மகன் என தலைப்பிட்டனர். இது தமிழ்நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களுக்குள் நடிப்பில் போட்டி :
'எம் மகன்' படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு கொண்டு சிறப்பாக நடித்திருந்தனர். ஒரு கண்டிப்பான தந்தையாக வெகு சிறப்பாக நடித்திருந்தார் நாசர். காட்சியில் நாசர் வருகிறார் என்றால் படத்தின் கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல பார்வையாளர்கள் கூட கொஞ்சம் டெரராக தான் இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. தந்தையை எம்டன் என மகன் அழைப்பது அழகாகவே இருந்தது. தனது மகனை (பரத்) மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் போது பார்ப்பவர்கள் அனைவரின் கோபத்திற்கும் ஆளானார். பரத்தின் தாய் கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன் நகைச்சுவையோடு பயம் கலந்து நடித்தது சிறப்பு. குறிப்பாக குன்னக்குடி கோயிலில் குழாயடியில் அங்கப்ரதக்ஷணம் செய்யும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது.
படத்தின் பலம் வடிவேலு காமெடி:
வடிவேலு காமெடி இப்படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட். அவர் வரும் காட்சிகள் அனைத்துமே கைதட்டல் பெற்றது. அதிலும் சுடுகாட்டில் வரும் சீன் இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வரப்ரசாதம். படுக்கையில்
இருக்கும் தாத்தா நடிப்பு கூட பாராட்டை பெற்றது. தாத்தா சாவு கல்யாண சாவு என்று குடும்பத்தார் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் படி இருந்தது.
அலப்பறை இல்லாத குடும்ப படம் :
படத்தில் பரத் - கோபிகா காதல் மிகவும் அழகாக முகம் சுழிப்பில்லாமல் ரசிகர்களை ரசிக்க வைத்து. என்ன தான் கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் மகனுக்கு தந்தை மீது இருக்கும் பாசம், மரியாதையை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் பரத். மொத்தத்தில் இப்படம் அதிரடி, ஆக்ஷன், த்ரில்லர் படங்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான நகைச்சுவையான எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக இருந்ததால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்றும் இந்த படம் ஏதாவது தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பானால் முதல் முறை பார்ப்பது போல் ரசித்து பார்க்கும் கூட்டமும் உள்ளது என்பது தான் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி .
பலரை கவர்ந்த எம்டன் மகன் என்கிற எம் மகன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது.