மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு வந்த நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியாபட்டை பஜ்ரங் தள் அமைப்பினர்  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பிரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படத்தை நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார். 






இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி கோவிலில் ரன்பீர் கபூர், ஆலியா பட் பிரம்மாஸ்திரா படம் வெளியாவதை முன்னிட்டு சென்று வழிபட்டனர் .  அப்போது அந்த இடத்திற்கு வந்தபோது பஜ்ரங் தள் தொண்டர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டனர். கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது ராக்ஸ்டார் படத்தை விளம்பரப்படுத்தும் போது ​​மாட்டிறைச்சி சாப்பிடுவதை விரும்புவதாகக் கூறினார். மேலும் தான் நான் ஒரு பெரிய மாட்டிறைச்சி ரசிகன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 






இதனை  கண்டித்து  ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு கருப்புக் கொடிகளை காட்டி பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கோமாதாவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாக கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டகாரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம் ஆலியா பட் கூடஒரு பேட்டியில் தனது 'பிரம்மாஸ்திரா' படத்தை பார்க்க ஆர்வமில்லாதவர்கள் பார்க்க வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.