ஆப்பிள் ஐஃபோன்களில் உள்ள ஐ ஓ.எஸ் சிஸ்டத்திற்கான புதிய சிறப்பம்சமாக பயனாளர்களின் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்டரியை அழிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். ஆப்பிள் ஐஃபோன்களைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கும் வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


`தி வெர்ஜ்’ என்ற ஆங்கில இணையதளம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது, கடந்த 2021ஆம் ஆண்டின் மே மாதம், கூகுள் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன்களுக்கான இந்த சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் ஐஃபோன்களில் உள்ள கூகுள் செயலியில் இந்த சிறப்பம்சம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, கூகுள் நிறுவனம் இந்தச் சிறப்பம்சத்தை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்துவதாக கூறியிருந்தது. 



எனினும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூகுள் நிறுவனம் இந்த சிறப்பம்சத்தை அறிமுகப்படுத்தவில்லை என்ற போது, இது தற்போது வெளியிடப்படவுள்ளது. இதே சிறப்பம்சம் கூகுள் நிறுவனத்தின் வெப் செயலிகளுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் முதலான சிஸ்டங்களில் இயங்கும் ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டுமே கூகுள் தளத்தில் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான தேடுதல் ஹிஸ்டரியை அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.






`சமீபத்திய 15 நிமிடங்களுக்கான சர்ச் ஹிஸ்டரியை அழிப்பது’ என்ற சிறப்பம்சம் எப்படி செயல்படுகிறது?


உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் செயலியின் மூலமாக நீங்கள் தேடியவற்றின் சமீபத்திய 15 நிமிடங்களுக்கான பதிவுகளை அழிக்கும் சிறப்பம்சமாக இதனை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 15 நிமிடங்களுக்கு முந்தைய பதிவுகள் அழியாமல் இருப்பதால், அதற்கு முந்தைய பதிவுகள் தானாகவே அழிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 



ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ஃபோன்களிலும், ஐஃபோன், ஐபேட் ஆகியவற்றிலும் இந்த சிறப்பம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?


1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் செயலிக்குச் செல்லவும்.


2. மேற்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும் `ப்ரொஃபைல்; ஐகானை அழுத்த வேண்டும். 


3. அதில் ‘Delete last 15 minutes’ என்ற பட்டனை அழுத்திய பிறகு, சமீபத்திய 15 நிமிடங்களுக்கான தேடுதல் ஹிஸ்டரி அழிக்கப்படும். 


இந்த சிறப்பம்சம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வரை, கூகுள் செயலியில் 3 மாதங்கள், 18 மாதங்கள், 36 மாதங்கள் ஆகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பதிவுகளை அழித்துக் கொள்ளும் வசதி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.