2022 ஐபிஎல் தொடருக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவ்வப்போது கிரிக்கெட் சூழலைச் சார்ந்து சர்ச்சையான கருத்துகளை பகிர்வது கம்பீரின் வழக்கம். இம்முறை, தோனியை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.
2011 உலகக்கோப்பைக்கு பிறகு, கம்பீர் முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் தோனிக்கு எதிரானதாகவே பார்க்கப்பட்டது. அவரும் அப்படியான கருத்துகளையே பேசி இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே உள்ள விரிசலை பற்றி ஒரு நேர்காணலில் மனம் திறந்திருக்கிறார் கம்பீர். அதில், “தோனியின்மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அது எப்போதும் தொடரும். 138 கோடி மக்கள் முன்னிலையில் இதை சொல்ல வேண்டும் என்றாலும், நான் சொல்வேன். ஆனால், தோனி இதை எதிர்ப்பார்க்க மாட்டார் என நினைக்கிறேன். ஒரு வேளை அவர் என்னை எதிர்ப்பார்த்தால், அந்த இடத்தில் அவருக்காக முதல் ஆளாய் நான் நிற்பேன். ஏனென்றால், இந்திய அணிகாக அவர் நிறைய செய்திருக்கிறார். ஒரு மனிதனாகவும் அவரை நாம் மிகவும் மதிக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தோனி டாப் ஆர்டரில் பேட்டிங் செய்திருந்தால், பல சாதனைகளை முறியடித்திருப்பார். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த நம்பர் 3 பேட்டர்களில் ஒருவராக இருந்திருப்பார்” என தெரிவித்திருக்கிறார். கம்பீரின் இந்த கருத்தை பார்த்து இரு வீரர் ரசிகர்களும் ஆச்சர்யத்தில் உள்ளனர். அதே சமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். கம்பீருக்கு நன்றி தெரிவித்து தோனி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
2022 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியுடன் பயணம் செய்ய இருக்கிறார் கம்பீர். 2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்