ஜி டாக் சேவை இந்த மாதம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கூகுள் ஹேங் அவுட் சேவையையும் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஹேங் அவுட் அறிமுகம்:


ஃபேஸ்புக்கிற்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட சமூக வலைதளமான கூகுள் ப்ள்ஸ் உடன் இணைந்து வந்தது கூகிள் ஹேங் அவுட்ஸ், வாட்ஸப்பைப் போன்று சேட்டிங் வசதிகொண்ட இந்த ஆப் 2013ம் ஆண்டு தனி ஆப்பாக வெளியானது. கூகுள் ப்ள்ஸில் இருந்த வசதிகளான கூகிள்ப்ளஸ் மெசஞ்சர் மற்றும் கூகுள் டாக் ஆகியவற்றை ஹேங் அவுட்ஸ் உடன் இணைத்தது. பின்னர் கூகுள் வாய் மற்றும் இண்டெர்நெட் டெலிபோனி ஆகியவற்றையும் ஹேங்அவுட்சுடன் இணைத்தது. ஹேங் அவுட்ஸ் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் ப்ளஸ்சைப் போலவே போதிய வரவேற்பில்லாமல் இருந்தது.


கூகுள் மீட் & சேட்டுடன் ஹேங்கவுட் இணைப்பு:


தொடர்பு வசதிக்காக கூகுள் ஒர்க்ஸ்பேஸின் ஒரு அங்கமாக கூகுள் மீட் மற்றும் கூகுள் சாட் என்ற இரண்டு படைப்புகளை 2017ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனம் உருவாக்கத் தொடங்கியது. இதனையடுத்து, ஹேங் அவுட்ஸைப் பயன்படுத்திக்கொண்டிருந்த பயனாளர்களை கூகுள் மீட் மற்றும் கூகுள் சாட் ஆகியவற்றிற்கு கடந்த 2020ம் ஆண்டு இடம்பெயரச் செய்தது.  அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்களும் கூகுள் மீட் மற்றும் சாட்டுக்கு 2021ம் ஆண்டு மாற்றப்பட்டனர். இதனால், ஹேங் அவுட் கைவிடப்படும் என்ற தகவல்கள் வெளியானது. ஆனாலும் பலர் கூகுள் ஹேங் அவுட்டை பயன்படுத்தி வந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. 




முடிவுக்கு வரும் சேவை:


அதன்படி கூகுள் ஹேங் அவுட் மொபைல் ஆப்பை பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள் கூகுள் சேட்டுக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில் ஜிமெயில் வெப் வெர்ஷனில் ஹேங் அவுட்டைப் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஜுலை மாதம் வரை கூகுள் சாட்டுக்கு மாற்றம் இருக்காது என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை வெப் வெர்ஷனில் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும், ஹேங் அவுட் சைட்டை சாட்டிற்கு மாற்றும் நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளது.


கூகுள் ஹேங் அவுட் மொபைல் ஆப்பை இப்போதும் பயன்படுத்திக்கொண்டிருந்தால், அதில் உள்ள உரையாடல்களை கூகுள் நிறுவனம் தன்னிச்சையாகவே கூகுள் சாட்டிற்கு மாற்றிவிடும் என்று கூறியுள்ளது. அதேபோல, சாட்டிங் டேட்டாவை பேக்கப் எடுத்துக்கொள்ளும் வசதியையும் வழங்கியுள்ளது. இந்த நவம்பருக்குப் பிறகு ஹேங் அவுட் சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.




கூகுள் சேட்டில் புதிய வசதிகள்:


கூகிள்  சேட்டில் நேரடி அழைப்புகள், இன் லைன் த்ரெட் உருவாக்கும் வசதி, ஒன்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்யும் வசதி ஆகியவற்றை அறிமுகப்படுத்த இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


கூகுள் நிறுவனத்தின் ஜிசேட் அல்லது ஜி டாக் (GTalk) சேவை இந்த மாதத்தின் மத்தியில் தான் நிறுத்தப்பட்டது என்ற நிலையில், இம்மாத இறுதியில் அதன் மற்றொரு படைப்பான கூகிள் ஹேங் அவுட்டையும் மூடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.