பஞ்ச தந்திரம் :


சரியாக இதே நாள் , 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம் . கமல்ஹாசன் , சிம்ரன் , நாகேஷ்  , ஜெயராமன், ஊர்வசி , ரம்யாகிருஷ்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கிரேஸி மோகன் வசனத்தில் உருவான திரைப்படம் . இப்போது பார்த்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைப்படம் . ஐந்து வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட நண்பர்கள் , அவர்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கையை சுற்றி நடக்கும் இடியாப்ப சிக்லதான் படத்தின் ஒன்லைன். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு இந்த படத்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தாக சில செய்திகளும் உண்டு. கமல்ஹாசன் மற்றும் அவர்களது நண்பர்கள் வைத்திருந்த குறுந்தாடி அந்த நேரத்தில் ட்ரெண்டிங் ஸ்டைலாகவே மாறிப்போனது. 






நோட்டீஸ் அடித்த சத்தியம் :


படத்திற்கு அமோக வரவேற்ப்பு கிடைத்தது. படம் 115 நாட்கள் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. பிரபல சத்தியம் திரையரங்கே தங்களது 28 ஆண்டுகால பயணத்தில் கிடைக்காத வருமானம் என நோட்டிஸெல்லாம் அடித்தது. அதில் “28 வருட சரித்திரத்தில் இதுவே முதல் சாதனை எமது முதல் வார வசூல் 10,66,000 ரூபாய். எங்கள் அரங்கத்தின் இதுவே உச்ச சாதனை. எங்கள் அரங்கில் வெளிடப்பட்ட உலகநாயகனின் தெனாலி , இந்தியன் போன்ற முந்திய படங்களின் சாதனையை முதல் வாரத்திலேயே முறியடித்த உலகநாயகன் குழுவினருக்கு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டிருந்தது. 


அதனை ட்விட்டரில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்திருக்கிறார்.






வசனம் :


படத்தில் வசனத்தில் தனது முழு பங்களிப்பை கொடுத்திருப்பார் வசனகர்த்தா கிரேஸி மோகன் . கதையோடு ஒன்றிய காட்சி , காட்சியோடு ஒன்றிய நகைச்சுவை என ரசிக்க வைப்பதாகத்தான் இருக்கும். “ஒரு கதை சொல்லு ராம் என தேவையானி கேட்க ... ஒரு ஊர்ல ராம்னு ஒரு கேனயன் இருந்தானாம்“ என சொல்லும்பொழுதெல்லாம்  திரையரங்கே கைக்கொட்டி சிரித்ததாம். அதே போல ஒரு சீரியஸான சீன் வரும்பொழுது , கமல்ஹாசனை சுற்றி வளைத்து , நண்பர்களின் மனைவிகள் ஒவ்வொரு பாஷையில் திட்டி தீர்ப்பார்கள் .. அப்போது கமல் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக அத்தனை மொழியிலும் பாணியிலும் அவர்களுக்கு பதில் கொடுப்பாரே .. அது வேற லெவலில் இருக்கும்






இசை : 


படத்திற்கு எந்த அளவு வசனங்கள் பக்க பலமாக இருந்ததோ அதே அளவிற்கு தேவாவின் இசையும் கைக்கொடுத்தது.  வந்தேன் வந்தேன் மீண்டும்  நானே வந்தேன் , வை ராஜா வை உள்ளிட்ட பாடல்கள் 20 வருடங்கள் கழித்தும் எங்கோ ஒரு திசையில் ஒலித்துக்கொண்டுதானே இருக்கின்றது. ம்ம்ம் இன்றொரு முக்கியமான பாடல் , இப்போ அதாங்க ரீல்ஸில் படு வைரலாக போய்க்கொண்டிருக்கிறதே!
“என்னோடு காதல் என்று பேச வைத்தது 
நீயா இல்லை நானா 
ஊரெங்கும் வதந்திக் காற்று வீச வைத்தது 
நானா இல்லை நீயா ”  இந்த கேள்வி பதில் பாட்டு கோலிவுட்டில் ஒன்றும் புதிதல்ல என்றாலும் கூட ,  இது முழுக்க முழுக்க  கணவன் , மனைவியின் ஈகோவை வெளிப்படுத்தும் கேள்வி பாடலாகத்தான் இருக்கும்.