கல்லூரி படிப்பின் இறுதியாண்டில் மாணவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பு வருவது வழக்கம். அப்படி ஒரு சில மாணவர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து வேலை வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்வார்கள். அதிலும் குறிப்பாக உலக தரம் வாய்ந்த சில நிறுவனங்களிலிருந்து இந்த வாய்ப்பு வந்தால் அவற்றில் அந்த மாணவர் எதை தேர்ந்தெடுப்பார் என்ற ஆர்வம் அதிகமாகும்.
அந்தவகையில் தற்போது கொல்கத்தாவிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூகுள், அமேசான் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 3 நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார். அவற்றில் அவர் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை தேர்வு செய்துள்ளார். கூகுள் மற்றும் அமேசான் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பிசாக் மொண்டல் என்ற இறுதியாண்டு மாணவர் பயின்று வருகிறார். அவர் கணினி அறிவியல் பொறியியல் படிப்பை படித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு நேர்காணலில் அமேசான், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றின் நேர்காணலில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பை பெற்று இருந்தார்.
அவற்றில் பிசாக் மொண்டல் வருடத்திற்கு 1.8 கோடி ரூபாய் வருமானம் வரும் ஃபேஸ்புக் வேலை வாய்ப்பை தேர்வு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த வேலை வாய்ப்பு எனக்கு கடந்த வாரம் வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் நான் இண்டென்சிப் செய்தேன். அதன்மூலம் எளிதாக நேர்காணலை எதிர்கொள்ள முடிந்தது. நான் ஃபேஸ்புக் நிறுவனத்தின் லண்டன் வேலைவாய்ப்பை தேர்வு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் 1.8 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் பெறுவது இதுவே முதல் முறையாகும். அதிக வருமானத்திற்காக கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்களின் வேலை வாய்ப்பை நிராகரித்து இந்த மாணவர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வேலை வாய்ப்பை தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க:இப்படி ஒரு நஷ்ட ஈடு வழக்கா? மாப்பிள்ளை ஊர்வலத்தால் சிக்கல்! மணமகனுக்கு ஷாக் கொடுத்த நண்பர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்