இணையதளத்தில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் தற்போது ‘பனானா ஏஐ சேலை‘ என்ற புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த போக்கைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ட்ரெண்டாகிவரும் ‘பனானா ஏஐ சேலை‘
இன்ஸ்டாகிராமில், ‘பனானா ஏஐ சேலை‘ என்ற புதிய ட்ரெண்ட் தற்போது வேகமாக பரவி, இளம் தலைமுறையை கவர்ந்து வருகிறது. இது, பயனாளர்களின் செல்ஃபிக்களை, வியக்கும் வகையிலான 90-களின் பாலிட் பாணி உருவப்படமாக மாற்றித் தருகிறது.
இந்த போக்கு, கூகுள் ஜெமினியின் நானோ பனானா பட எடிட்டிங் கருவி மற்றும் நானோ பனானா ஏஐ 3டி உருவப்படப் போக்கை பயன்படுத்துகிறது. இந்த எடிட்டுகள் மூலம், காற்றில் மிதக்கும் ஷிஃபான் புடவைகள், ரெட்ரோ அமைப்பு, கருப்பு பார்ட்டி உடை தோற்றங்கள், மலர்களுடன் கூடிய பிரின்டட் உடைகள், வியத்தகு நிழல்களுடன், அற்புதமான பின்னணிகளுடன் கூடிய நிழற்படங்கள் போன்றவற்றை உருவாக்கித் தருகிறது.
நேனோ பனானா ஏஐ தொழில்நுட்பம், பயனாளர்களின் புகைப்படங்களை நுண்ணிய டீட்டெய்ல்களுடன் 3டி உருவப்படங்களாக மாற்ற உதவுகிறது. பொம்மை போன்ற அடித்தளங்கள், வண்ணமயமான காட்சி அமைப்புகள் மூலம் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்படும் நியில், புதிய புடனை மாறுபாடு, சினிமா, விண்டேஜ் பாணி புகைப்படங்களை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியுள்ளது.
காவல்துறை எச்சரிக்கை
இந்த புதிய நேனோ பனானா ஸ்டைல் வைரலாகியுள்ள நிலையில், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இணையத்தில் பிரபலமான தலைப்புகளை கண்டு ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ‘நேனோ பனானா‘ மோகத்தின் வலையில் விழுவது ஆபத்தானது என்று கூறியுள்ள காவல்துறை, பயனாளர்கள் தனிப்பட்ட தகவல்களை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டால், மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
ஒரே கிளிக்கில், பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் குற்றவாளிகளின் கைகளில் போய் சேரக்கூடும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும், ஜெமினி தளத்தை பிரதிபலிக்கும் போலி வலைதளங்கள் அல்லது அதிகாரப்பூர்வமற்ற செயலிகளில் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்படி போலி வலைதளங்களில் உங்கள் தரவு பதிவேற்றப்பட்டால், அதை மீட்பது மிகவும் கடினமானதாகிவிடும் என்றும், ‘உங்கள் தரவு, உங்கள் பணம் - உங்கள் பொறுப்பு‘ என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ கூகுள் ஜெமினி செயலியை திறந்தோ அல்லது ஜெமினி ஏஐ ஸ்டுடியோவை அணுகுமாறும், உங்கள் கூகுள் கண்க்கில் உள்நுழைந்து, ‘படத் திருத்தத்தை முயற்சிக்கவும்‘ என்பதை கிளிக் செய்து, பனானா ஐகானைத் தேடி, தெளிவான தனிப் படத்தை பதிவேற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ செயலியில் இந்த படிகளை பின்பற்றுவதன் மூலம், பயனாளர்கள் தனிப்பட்ட தரவு அல்லது பாதுகாப்பை சமரசம் செய்யாமல், பாதுகாப்பாக இந்த போக்கை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.