இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். நம்மில் பலர் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், நமது தனிப்பட்ட விஷயங்களை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை நமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றோம். ஆம், நமது தகவல்கள், நம்மை பற்றிய செய்திகள் பல செயலிகளில் திருடப்படுகின்றன. நாம் யாரை தொடர்பு கொள்கிறோம், என்ன பேசுகிறோம், எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்ற தகவல்கள் அனைத்தும் பல விதமான நிறுவனங்களிடம் உள்ளன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுக்கு தெரியாத பல நிறுவனங்களுக்கு உங்களை நன்றாகத் தெரியும். சில நேரங்களில் உங்களை விட அதிகமாக கூட தெரிந்திருக்கலாம். அந்த அளவுக்கு மிகவும் ஆபத்தான விஷயமாக மாறி வருவதால்தான் பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெறுவதில்லை. 



ஆனால் ஆண்டராய்டு பயனர்கள் கண்டிப்பாக பயன்படுத்தியே ஆக வேண்டிய செயலிகள் ஆன கால் மற்றும் மெசேஜிங் செயலிகள் இந்த வேலையை செய்யும்போது கூகுளே திணறுகிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய, ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் தனியுரிமைச் சிக்கல்களை சரி செய்ய கூகுள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இருப்பினும் ஒரு புதிய ஆய்வுக் கட்டுரையானது, கூகுள் கால் மற்றும் மெசேஜஸ் போன்ற செயலிகளில் இருந்து, நமது தகவல்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறுகிறது. ஆண்ட்ராய்டில் உள்ள கூகுள் கால் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் என்ன தகவல்களை கூகுளுக்கு அனுப்புகிறது? என்ற தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டிரினிட்டி பள்ளியில் கணினி அறிவியல் பேராசிரியராக இருக்கும் டக்ளஸ் லீத் இந்த ஆராய்ச்சியை தொகுத்துள்ளார்.



இதுகுறித்து பேராசிரியர் டக்ளஸ் லீத் கூறுகையில், "இந்தப் செயலிகள் பயனர் தகவல்தொடர்புகள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றன. இதில் கால் மற்றும் மெஸேஜ்களின் நேரம், தொலைபேசி எண்கள், இன் கமிங் மற்றும் அவுட் கோயிங் அழைப்புப் பதிவுகள், அழைப்பு காலம் மற்றும் நீளம் ஆகியவை அடங்குகிறது. இது பின்னர் Google Play Services Clearcut logger சேவை மற்றும் Firebase Analytics சேவையைப் பயன்படுத்தி Google இன் சேவையகங்களுக்கு பகிரப்படுகிறது. ஸ்பேம் ஃபில்டர் மற்றும் கமர்ஷியல் காலர் ஐடிகள் போன்ற அம்சங்களை இயக்கி, செய்தி அனுப்புபவர், பெறுநர் ஆகியோரின் தனாகவல்கள் திருடப்படுகின்றன." என்று குறிப்பிட்டுள்ளார். அழைப்பில் உள்ள இரண்டு சாதனங்களை இணைக்க இந்த தகவல்கள் நிறுவனத்திற்கு உதவுகிறது. கூகுள் கால் மற்றும் மெசேஜஸ் ஆப்ஸ் இரண்டிலும் எந்தத் தரவு சேகரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் தனியுரிமைக் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.