மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுகிறது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு எப்படி நடக்கும் என்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ளலாம்.


தொழிற்கல்வி அல்லாத பட்டப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு மேற்கொண்டு வருகின்றது. பல்கலைக்கழகங்களுக்கு தேவையான நிதியையும் இந்த அமைப்பே வழங்கி வருகிறது. 


மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் யுஜிசி உள்ளிட்ட உயர் கல்வி ஆணையங்கள், 2020ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையைப் படிப்படியாக நாடு முழுவதிலும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு இளங்கலை கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) என்ற திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. 




2010-ல் சியூசெட்


முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே 2010-ம் ஆண்டில் சியூசெட் எனப்படும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Central Universities Common Entrance Test) அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அதை அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழலில் புதிய கல்விக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மத்திய பாஜக அரசின் சார்பில் CUET தேர்வு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், இந்த நுழைவுத் தேர்வு முறையைப்  பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பிற நுழைவுத் தேர்வுகள்


ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளுக்கும் பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட சில கலைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசு பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல, சிஏ படிப்புக்கு ICAI நுழைவுத் தேர்வும், சட்டப் படிப்புகளுக்கு  CLAT நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்த சூழலில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  




இதுகுறித்து அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார், ''மத்திய பல்கலைக்கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.  இந்த நடைமுறை மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்துக் கல்வி வாரியங்களையும் சார்ந்த, குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் விதமாக அமையும். 


இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு,  நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். இந்தத் தேர்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மீதான நிதிச் சுமையை குறைக்கும். ஏனெனில் விண்ணப்பதாரர்கள் இந்த ஒரு தேர்வை மட்டுமே எழுதினால் போதுமானது. இந்தத் தேர்வால் ஏற்கெனவே இருக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு பொது மற்றும் ஒதுக்கீட்டுப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.


அனைத்து பல்கலைக்கழகங்களும் முதுகலைப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு முறையை பின்பற்றும் என நம்புகிறோம்'' என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 


 



யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார்


இதுகுறித்து மேலும் வெளியான விவரங்களின்படி, பொது நுழைவுத் தேர்வு என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும்.  ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. 


3 பிரிவுகளாகக் கேள்விகள்


பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 


இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 


2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.


3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 




பல்கலைக்கழங்களின் தேவைக்கேற்பத் தேர்வுகள் 


இதில் 2ஆவது மற்றும் 3ஆவது பிரிவான துறை சார் அறிவுக்கான தேர்வும் பொது அறிவுத் தேர்வும் கட்டாயமில்லை. பல்கலைக்கழகங்களின் தேவைக்கு ஏற்ப, இந்தப் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். உதாரணத்துக்கு, கட்டாய மொழித் தேர்வுடன் ஒரு மாணவர் பொது அறிவுக்கான தேர்வை எழுதலாம். அல்லது கட்டாய மொழித் தேர்வுடன் துறை சார் தேர்வை மட்டும் எழுதலாம். 


இத்துடன் நிபுணத்துவம் தேவைப்படும் படிப்புகளான இசை, ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலை படிப்புகளுக்கு, கல்லூரிகள் தனியாகத் தேர்வோ, நேர்காணலோ நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2 கட்டங்களாகத் தேர்வு


இரண்டு கட்டங்களாக இந்த நுழைவுத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தில், கட்டாய மொழிப் பாடமும் 2 துறை சார் தாள்களையும் எழுத வேண்டும். இரண்டாவது கட்டத்தில் இரண்டு கட்டத் தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுமா, வெவ்வேறு நாட்களில் நடக்குமா என்பதை என்டிஏ இதுவரை தெளிவுபடுத்தவில்லை.