காரைக்கால் மாதா கோயில் வீதியில் பிரசித்தி பெற்ற பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முகப்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மாதா கோயில் வீதியில் சப்பரம் செல்லும் வழியில் சாலையின் குறுக்கே மணிமண்டபம் அமைக்க கூடாது என்றும் கிறிஸ்தவர்களின் இறுதி ஊர்வலம் நடைபெறும் போது இடைஞ்சல் ஏற்படும் என்றும் இதற்கு இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பொய்யாத மூர்த்தி ஆலயத்திற்கு மணிமண்டபம் அமைக்க புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி விநாயகர் கோயிலுக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு புதுச்சேரி சபாநாயகர் எம்பலம் செல்வம் அடிக்கல் நாட்டி மணி மண்டப கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் மணி மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காரைக்கால் நகராட்சி நிர்வாகம் பொய்யாத விநாயகர் ஆலயத்தின் வாயிலில் சாலையின் குறுக்காக கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை இடிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் பாஜகவினர் உடன் இணைந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாளை பேரணியும் நடத்தப்பட இருக்கிறது. கடையடைப்பின் காரணமாக காரைக்காலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மணிமண்டபம் கட்டுவதற்கு ஒரு சாரார் ஆதரவும், மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், காரைக்காலில் உள்ள சமாதான கமிட்டியினர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆதரவும், எதிர்ப்பும் ஒரே நேரத்தில் எழுந்த நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் புதுச்சேரி என். ஆர். காங்கிரஸ் அரசு கோயிலின் முன் மணி மண்டபம் கட்ட நிதி ஒதுக்கி பிரச்சனையை உருவாக்கியிருப்பது கண்டனத்தை எழுப்பியிருக்கிறது. காரைக்காலில் பொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலய மணி மண்டப பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனால் மும்மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் காரைக்காலில் மத பிரச்னை வெளிப்படையாக தலைகாட்ட தொடங்கி உள்ள நிலையில் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் புதுச்சேரி அரசும் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வழி செய்ய வேண்டும் என காரைக்கால் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.