ஆண்டுக்கு ஆண்டு புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது பிரபல அமேசான் நிறுவனம் . அந்த வகையில் இந்த ஆண்டு புதிய சாதங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியது. அமேசான் அறிமுகப்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்துமே வீட்டில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டது. சமீபத்தில் கூட ஆஸ்ட்ரோ வீட்டு பயன்பாட்டிற்கு ஏதுவான ரோபோவை அறிமுகப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் புதிய வகை ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் ஒன்றை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அமேசான். இந்த ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டியின் மூலம் , உள்ளே வைக்கப்பட்ட பொருட்களின் அளவை வெளியே இருக்கும் திரை மூலம் அறிந்துக்கொள்ள முடியுமாம். பொதுவாகவே சிலர் ஃபிரிட்ஜின் வைக்கப்படும் பொருட்கள் தீர்ந்துவிட்டது என்பதை கடைசி நிமிடத்தில்தான் அறிந்துக்கொள்வோம். ஆனால் அமேசான் அறிமுகப்படுத்தவுள்ள நம்மில் இந்த புதிய ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் குறைவாக உள்ள பொருட்களின் அலர்ட்டுகளை குரல் கட்டளையாகவே பயனாளர்களுக்கு கொடுத்துவிடுமாம். அதே போல அமேசான் ஸ்டோரில் தீர்ந்த பொருளை ஆடர் செய்துக்கொள்ளவும் வழிவகை செய்யுமாம்.
ஸ்மார்ட் ஃபிரிஜை அலாக்ஸா குரல் கட்டளை மூலமாகவும் கட்டுப்படுத்தும் வசதிகள் இணைக்கப்பட்டதாக தெரிகிறது . எனவே குரல் கட்டளை மூலமாகவே தீர்ந்து போன பழங்களையோ, அல்லது காய்கறிகளையோ ஆடர் செய்துக்கொள்ளலாம் . அதே போல சில உணவுகளை எப்படி செய்வது என்ற பரிந்துரைகளை வழங்குமாம். பொதுவாக அமேசான் ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களை தயாரிப்பதில்லை . எனவே பிரபல நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.
முன்னதாக இதுபோன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்சாதன பெட்டிகளை அமேசான் தங்களது ஆளில்லாத கடைகளில் பயன்படுத்தி வருகிறது. அதை நம் வீட்டு சமையல் அறைக்கும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அமேசானின் நோக்கமாம். ஆளில்லாத கடைகளில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டிகளில் ஜஸ்ட் வாக் அவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தள்ளுவண்டிகளில் எடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் விலை கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் ஸ்மார்ட் ஃபிரிட்ஜுகள் உருவாக்கப்படும் என தெரிகிறது. தற்போது முயற்சியில் இருந்து வரும் ஸ்மார்ட் ஃபிரிட்ஜை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சந்தைப்படுத்த வேண்டும் என அமேசான் திட்டமிட்டுள்ளது.அமேசான் ஃப்ரெஷ் மற்றும் லேப் 126 ஆகிய இரண்டும் இணைந்து ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம்.