கொரோனா நெருக்கடி காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கு ஏற்றவாறு பலவிதமான ஊரடங்கு உத்தரவுகளும் அமலில் இருந்தன. இதனால் திரையரங்குகள் உட்படப் பல பொது இடங்கள் மூடப்பட்டன. நடுவில் சில மாதங்கள் கழித்துத் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. முழு அனுமதி இருந்த நாடுகளிலும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு வர அச்சப்பட்டிருந்தனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கின. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்தார்கள். நவம்பர் மாதம் தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முன்னதாகத் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது. தயாரிப்பு நிறுவனங்களும், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெளியிடாமல் ஒத்தி வைத்திருந்த திரைப்படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. இதில் வெளிநாட்டு திரைப்படங்கள் வெளியாவதை குறித்த எதிர்பார்ப்பு பெரிதாக இருந்தது. 



கடந்த மாதத்தில் ’ஷாங் சி’, ’ஃப்ரீ கை’, ’ஜங்கிள் க்ரூஸ்’, ‘நோ டைம் டு டை’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் இந்தியாவில் வெள்ளித்திரை வெளியீட்டைக் கண்டுள்ளன. வெளியாகி இருந்தாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இப்போது கோரோணா அச்சுறுத்தல் விலகி வருவதால், அடுத்த வருட இறுதி வரை, தங்கள் தயாரிப்பில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் முக்கியத் திரைப்படங்களின் பட்டியலை டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 



அக்டோபர் 22 ஆம் தேதி ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் தி லாஸ்ட் ட்யூல் திரைப்படம் வெளியாகிறது அதைத் தொடர்ந்து, ‘ரான்ஸ் கான் ராங்’ அக்டோபர் 29 ஆம் தேதி வெளியாகிறது. நவம்பர் 5 ஆம் தேதி தீபாவளிக்கு eternals திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அனிமேஷன் திரைப்படமான ‘என்காண்டோ’ நவம்பர் 26 ஆம் தேதியும் ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ மற்றும் ‘தி கிங்ஸ் மேன்’ ஆகிய படங்கள் முறையே டிசம்பர் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வெளியாகிறது. 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி அன்று ‘டெத் ஆன் தி நைல்’ படமும் அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் ‘டர்னிங் ரெட்’ படமும் மார்வெல் ஸ்டுடியோவின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மார்ச் 25 ஆம் தேதியும் டிஸ்னி பிக்சரின் ‘லைட் இயர்’ ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இவற்றை தொடர்ந்து ரயன் கூகிளர் இயக்கியுள்ள பிளாக் பாந்தர் இரண்டாம் பாகமான வகாண்டா ஃபாரெவர் திரைப்படம் ஜூலை 8 ஆம் தேதியும், ‘பிளேட்’ அக்டோபர் 7 ஆம் தேதியும், நியா டாகோஸ்ட்டா இயக்கத்தில் ‘தி மார்வெல்ஸ்’ திரைப்படம் நவம்பர் 11 ஆம் தேதியும் வெளியாகிறது. அதனை தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படம் ஆன அவதாரின் இரண்டாம் பாகம் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதனையும் ஜேம்ஸ் கேமரூனே இயக்கியுள்ளார்.