திருவண்ணாமலையில் கடும் உடல் உழைப்புக்குரிய மெக்கானிக் கடை, பழைய இரும்பு பொருட்களை வாங்கி உடைக்கும் கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தொழிலாளர் நலத்துறை நேரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். அதன் பேரில், திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தினி தலைமையில் திருவண்ணாமலை நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, திருவண்ணாமலை, மணலூர்பேட்டை சாலையில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடையில் வேலை செய்த கோரிமேடு நகர்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை மீட்டனர். மேலும் அதேபகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி உடைத்து மறுசுழற்சிக்கு விற்பனை செய்யும் கடையில் வேலை செய்த வேளையாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், மற்றும் 16 வயது சிறுவர்கள் என 2 நபர்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் மீட்டனர்.
அதனை தொடர்ந்து பழைய இரும்புபொருட்கள் கடையை நடத்தி வந்த கடையின் உரிமையாளர்கள் சையத் கவுஸ் (32), முருகன் (41) மற்றும் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக் கடையின் உரிமையாளர் ரிஸ்வான் (29) ஆகிய 3 நபர்களை சிறுவர்களை வைத்து வேலை செய்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தினி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர்கள் 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் வழக்குப்பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே பாய்ந்து வருகிறது.,
இது குறித்து சமூக ஆர்வலர் வினித் கூறுகையில், தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இன்னும் அதிகம் இருப்பதாக, கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. விதை நெல் வீணாவதைபோல், பள்ளி செல்லாத குழந்தைகளின் வாழ்க்கை திசைமாறுகிறது. பெற்றோரின் அறியாமை, பெற்றோரின் பேராசை, மற்றும் குடும்பத்தின் வறுமை, முதலாளியின் மனிதநேயமின்மை மற்றும் பெற்றோரின் தியாக மனப்பான்மை அற்ற செயல் என ஐந்து விஷயங்களால், குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் முறையாக ஆய்வு நடத்தினால் பல குழந்தை தொழிளாலர்களை காப்பாற்ற முடியும் ஆனால் தங்களின் கடைமைகளை செய்வது போன்று ஆய்வு நடத்துகின்றனர் என்றும் இது போன்று சிறுவர்களை வைத்து வேலைவாங்கும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவுமட்டும் செய்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் மட்டுமே குழந்தை தொழிளாலர் நமது நாட்டில் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்தார். பொதுமக்கள் இத்தகைய குழந்தை தொழிலாளர்கள் முறையை கண்டறிய நேரிட்டால் சைல்டு லைன் தொலைபேசி எண்–1098 தகவல் தெரிவிக்கலாம். மேலும் மத்திய அரசின் இணையதளமான www.pencil.gov.in வாயிலாக புகார் செய்யலாம்.