ட்விட்டர் தளத்தை கட்டணம் செலுத்தாமல் பயன்படுத்தும் பயனாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே அதில் மாற்றங்கள் என்பது குவிந்து வருகின்றன. நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
சர்ச்சைக்குள்ளான அறிவிப்பு:
அந்த வரிசையில் தான் பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மீண்டும் மீண்டும் மாற்றும் எலான் மஸ்க்:
கடந்த 10 மணி நேரத்தில் பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு எத்தனை ட்வீட்களை அணுகலாம் என்ற கட்டுப்பாட்டை எலான் மஸ்க் 3 முறை மாற்றியுள்ளார். முதலில் வெளியான அறிவிப்பின்படி, கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்ற வெரிஃபைடு கணக்காளர்கள் நாள் ஒன்றிற்கு 6000 டிவீட்களையும், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 600 டிவீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 300 டிவீட்களையும் அணுக முடியும் என தெரிவித்தார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அந்த எண்ணிக்கையை முறையே 8000, 800 மற்றும் 400 என மாற்றினார். இறுதியாக தற்போது, வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ட்வீட்களை அணுக முடியும். வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் 1000 ட்வீட்களையும், புதிய வெரிஃபைடு செய்யப்படாத கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 500 ட்வீட்களையும் அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மணி நேரத்தில் 3 முறை இந்த கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டுள்ளதால் பயனாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
காரணம் என்ன?
இதற்கான காரணத்தை விளக்கியுள்ள எலான் மஸ்க் “தற்போது எடுக்கப்பட்டுள்ளது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. அதிகப்படியான தரவுகளை நாங்கள் எடுத்துக்கொள்வது சாதாரண பயனாளர்களுக்கான சேவையை இழிவுபடுத்துவது போன்று உள்ளது” என தெரிவித்துள்ளார். அவரது பெயரில் உள்ள மற்றொரு கணக்கில் “நாம் அனைவரும் ட்விட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தி அதிலேயே மூழ்கி இருக்கிறோம்.
அதிலிருந்து சற்று விலக வேண்டும் என்பதற்கே புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் இந்த உலகத்திற்கு மற்றொரு நல்லதை செய்து இருக்கிறேன் எனும் வகையிலும் இந்த நடவடிக்கையை பயனாளர்கள் பார்க்கலாம்” என பதிவிட்டு இருக்க அதனை எலான் மஸ்க் ரிட்வீட் செய்துள்ளார்.