உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க் வழக்கம் போல் தன்னைப் பின் தொடர்பவர்களைத் தனது பதிவு ஒன்றின் மூலம் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் தான் தனது பணியை விட்டு விலகி, முழு நேர Social media influencer ஆவதற்குச் சிந்திப்பதாகக் கூறியுள்ளார்.
`என் பணிகளில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டு, முழு நேர influence ஆகலாம் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
எனினும் அவரது ஃபாலோவர்களுக்கு அவர் ஏற்கனவே influencer என்பது நன்றாகத் தெரியும். ஏனெனில், அவரிடம் இருந்து வரும் ஒற்றை ட்விட்டர் பதிவே பங்குச் சந்தையில் தாக்கம் செலுத்துவதற்கும், க்ரிப்டோகரன்சியின் மதிப்பைக் கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் தாக்கம் செலுத்துத்துவற்கும் காரணமாக அமைந்திருக்கின்றன.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் பதிவிட்டிருக்கும் ட்வீட் சுமார் ஆயிரக்கணக்கான பதில் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் வெகு சில நிமிடங்களிலேயே உருவாக்கியுள்ளது. பல்வேறு மக்களும் அவருக்குப் பல பரிந்துரைகள் வழங்கி வருகின்றன. பலரும் எலான் மஸ்க் யூட்யூப் சேனல் தொடங்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
யூட்யூப் தளத்தில் சர்வதேச அளவில் அதிக பணம் ஈட்டும் `மிஸ்டர் பீஸ்ட்;’ என்ற யூட்யூப் பிரபலம் தான் எலான் மஸ்கிடம் `எப்படி யூட்யூப் பார்வைகளைப் பெறுவது’ என்று தான் கற்றுத் தருவதாகக் கூற, எலான் மஸ்க் அதற்கு கைகூப்பிய எமோஜியைப் பதிலாகப் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சுமார் 65 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். மேலும் தன் சமூக வலைத்தளங்களில் தன் ஃபாலோவர்களுடன் சரளமாக உரையாடும் வெகுசில பில்லியனர்களுள் எலான் மஸ்க்கும் ஒருவர். தன்னை ஈர்க்கும் ஒவ்வொரு விவகாரம் மீது எமோஜி, ஒரு லைன் பதிவு, மீம்கள் முதலானவற்றை அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த வாரம், தனக்குத் தானே `மொஹாக்’ ஹேர்ஸ்டைலில் முடி வெட்டிக் கொண்டு எலான் மஸ்க் பதிவிட்ட படம் வைரலாகப் பரவியது. அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தனது புதிய ஹேர்ஸ்டைலுடன் தனது இளைய மகன், மகனின் காப்பாளர், தனது வளர்ப்பு நாய் ஆகியோருடன் அவர் பயணித்த போது எடுக்கப்பட்ட படங்களும் வைரலாகின. இந்தப் படங்களை வைத்து எலான் மஸ்க் பற்றி பல்வேறு மீம்கள் பரவின. ஒரு பயனாளர் எலான் மஸ்கின் புதிய ஹேர்ஸ்டைல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போல இருப்பதாகவும் கிண்டலடிக்க, அதுவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.