”கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ , கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி மட்டும் மூஞ்சில் எலியாக பிறக்க நேரிடும் சிவன் சொத்து குலநாசம்” மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த தஞ்சாக்கூரில் ஸ்ரீ ஜெகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை யாக பூஜைகள் தொடங்கின. இன்று   இரண்டாம் கால பூஜை முடிந்து பூர்ணாஹூதியாகி கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோயிலைச்சுற்றி வலம் வந்தனர்.

அதன் பின்னர் வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு தரிசனம் தர காலை 10 மணிக்கு மூலவர் ஜெகதீஸ்வரர் சுவாமி விமானக் கலசத்தின் மீது வேதமந்திரங்கள் முழங்க கலசநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.  அதைத் தொடர்ந்து கோயில் பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது.



குடமுழுக்கு விழாவை கோவில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்பு லிங்க வடிவிலான ஜெகதீஸ்வரர் சுவாமிக்கும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கலச நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. திருக்குட நன்னீராட்டு விழாவில் நடைபெற்ற கடம் புறப்பாடு நிகழ்ச்சி திருக்குட நன்னீராட்டு விழாவில் மதுரை ஆதீனம்  ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைச் செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் காரைக்குடி முன்னாள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  அதைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். 



திருக்குட நன்னீராட்டு விழா வில் நடைபெற்ற பாராட்டு விழாவின்போது மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். மதியம் கோயிலில் நடந்த அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். திருக்குட நன்னீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகியும் சமூக  ஆர்வலருமான தஞ்சாக்கூர் கே.ஏ.பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.



மதுரை ஆதீனம் மேடையில், ”தேசிய கொடி ஒரு சைவ கொடி பச்சை நிறம் அம்பாளை குறிக்கிறது சிவப்பு நிறம் செம்மேனி அம்மாளின் நிறத்தைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் ரிஷபத்தை குறிக்கிறது ஆக மொத்தம் தேசியக்கொடி சைவக்கொடியாகும்.  கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ , கோயிலுக்கு கடனை செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள் இல்லையேல் அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி மட்டும் மூஞ்சில் எலியாக பிறக்க நேரிடும் சிவன் சொத்து குலநாசம்” என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது