Elon Musk: விக்கிப்பீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் தருவதாக கூறிய எலான் மஸ்கின் பதிவு  தற்போது வைரலாகி வருகிறது.


புதிய சர்ச்சையை கிளப்பிய மஸ்க்:


அண்மையில் ட்விட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றினார். இதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்நிலையில், அதேபோல மற்றொரு விஷயத்தை  பேசி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.  அதாவது, விக்கிப்பீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் தருவதாக கூறிய எலான் மஸ்கின் பதிவு வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், "விக்கிப்பீடியாவை நான் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயாராக இருக்கிறேன்.  ஆனால் விக்கிபிடியா பெயரை ’Dickipidia' என்று மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். விக்கிப்பீடியோ தனது பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர் கொடுக்கப்போவதாக" பதிவிட்டிருந்தார். 


”விக்கிப்பீடியா பெயரை மாற்றுங்கள்"






இதனை அடுத்து, ட்விட்டர் பயனர் ஒருவர் விக்கிப்பீடியாவை குறிப்பிட்டு, "தற்போது மாற்றிக் கொள்ளுங்கள். பணத்தை கொடுத்தவுடன்  மீண்டும் பெயரை விக்கிப்பீடியா என்று மாற்றிக் கொள்ளலாம்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "விக்கிப்பீடியாவின் பெயரை ஒருமுறை மாற்றினால், குறைந்தபட்சம் மாற்றப்பட்ட பெயர் ஒருவருடன் இருக்க வேண்டும். நான் ஒன்றும் முட்டாள் அல்ல" என்று எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார். இந்த உரையாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ட்விட்டரை குவியும் மாற்றங்கள்:


உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து,  காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது. 


பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இதன்படி மாதந்தோறும் ரூ.566 இந்தியாவில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.