மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளம், தமிழ் தொடங்கி பரவலாக இந்திய மொழிகளில் பாடி பிரபல பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் சங்கர் மகாதேவன். தேசிய விருதுகள், கேரள மாநில விருது, பத்மஸ்ரீ விருது என பல்வேறு விருதுகளைக் குவித்து தன் கம்பீரக் குரலுக்கு பல மொழி ரசிகர்களையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக தமிழில் நடிகர் விஜய்க்கு ‘மச்சான் பேரு மதுர’, ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ உள்ளிட்ட பாடல்கள், அஜித், சூர்யாவுக்கு ஓப்பனிங் பாடல்கள் எனப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவர் இன்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
ரேஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் விஜயதசமி உத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சங்கர் மகாதேவன் பேசியதாவது: “நான் என்ன சொல்ல முடியும்? நான் உங்களுக்கு தலைவணங்க மட்டுமே செய்ய முடியும். 'அகண்ட பாரதம்' என்ற நமது சித்தாந்தம், நமது மரபுகள், நமது கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு எவரையும் விட அதிகம்.
நான் ஒவ்வொரு மனிதனின் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இதுதான் நமது நாடு" என்று பேசினார். மேலும், மும்பையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடனான தனது சந்திப்பைப் பற்றி விவரித்த சங்கர் மகாதேவன், “அது ஒரு நிறைவான அனுபவம். இந்த தனிப்பட்ட அன்பான அழைப்புக்கு நன்றி. இன்று நான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று சங்கர் மகாதேவன் பேசினார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கென ஒரு தேசிய கீதத்தை சங்கர் மகாதேவன் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி சங்கர் மகாதேவனின் இந்தப் பேச்சு சினிமா, அரசியல் வட்டாரங்களில் கவனமீர்த்துள்ளது.