கடந்த ஒரு மணிநேரத்திற்கு மேலாக மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ட்விட்டர் (எக்ஸ்) பக்கம் முடங்கியது. கிடைத்த தகவலின் படி, சரியாக காலை 10.37 மணியிலிருந்து எக்ஸ் பக்கமானது முழுமையாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.
எக்ஸ் பக்கத்தின் நேரடி செயலிழப்பு வரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, நாக்பூர் மற்றும் சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து எக்ஸ் பக்கம் செயலிழந்ததாக பெரும்பால பயனர்கள் பதிவிட்டு வருவதாக அந்த வரைபடத்தில் காட்டப்படுகிறது.
மேலும் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, யுஎஸ் மற்றும் யுகே போன்ற நாடுகளை சேர்ந்த மக்களும் இதே பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலன் மஸ்க் எக்ஸ் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே, ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி செயலிழப்புகள் காணப்படுகிறது. அடிக்கடி எக்ஸ் செயலிழப்பதும், மீண்டும் இயங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்தாண்டு எக்ஸ் பக்கம் செயலிழப்பை எதிர்கொள்வது இது முதல்முறை அல்ல. இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் செயலிழப்பை எதிர்கொண்டது. ஜூலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் எக்ஸ் பக்கம் சுமார் 13,000 மடங்குக்கு மேல் குறைந்ததாக டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த மார்ச் 6ம் தேதியும் சில மணி நேரம் எக்ஸ் பக்கம் முடங்கியது. இதனால் பயனர்கள் படங்கள், போஸ்ட்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட முடியவில்லை என கருத்து தெரிவித்து வந்தனர். பிப்ரவரியில் கூட, ட்விட்டரின் சேவை பல மணிநேரம் முடங்கியது. இதில் பயனர்கள் நேரடி செய்திகளைப் படிக்கவோ அல்லது பதிவுகளை பதிவிடவோ, புதுப்பிக்கவோ முடியவில்லை.