மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கியது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும், ரோஹித் சர்மா ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் இருந்து அன் ஃபாலோ செய்யவும் தொடங்கினர். 






ரோஹித் சர்மாவின் தலைமையில் மும்பை ஐந்து முறை ஐபிஎல் பட்டத்தை வென்றது. இருப்பினும், மும்பை அணி நிர்வாகம் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அணி கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் வீரராக மட்டும் இருந்தார். கடந்த 2022 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையின் கீழ், 2022 ல் சாம்பியன் பட்டத்தையும், 2023ல் இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தது.


இதற்கிடையில், ரோஹித் சர்மா ஐபிஎல்லில் வேறு சில அணிகளுக்கான விளையாட போவதாக செய்திகள் அடுத்தடுத்து வெளிவருகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கபோவது இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து வருகிறது.  இந்தநிலையில், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ட்விட்டரில் ROHIT LEAVE MI என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 






ரசிகர்களின் கோபம் மற்றும் ரோஹித்தின் பணி என்ன என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் குளோபல் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜெயவர்தன பதிலளித்துள்ளார். அதில், “ஆடுகளத்திலும் வெளியிலும் ரோஹித் அணியில் இருப்பது மும்பை இந்தியன்ஸின் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்ட உதவும். அவர் மிகவும் புத்திசாலித்தனமான கிரிக்கெட் வீரர். ரோஹித்துடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். அவரும் ஒரு அசாதாரண மனிதர். வழிகாட்டும் வெளிச்சமாக விளங்கும் மும்பை இந்தியன்ஸின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக அவர் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.


முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இது நடந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடி வந்தார். கேப்டன் பதவியை வேறொருவரிடம் ஒப்படைத்து, மும்பை இந்தியன்ஸ் சரியான திசையில் செல்வதை உறுதி செய்தார். ரோஹித்தின் நிலையும் அப்படித்தான். 


ரசிகர்கள் இப்படி சமூக வலைதளங்களில் பதிவிடுவது நியாயம்தான். எல்லோரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள், அதையும் மதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதே நேரத்தில் ஒரு உரிமையாளராக நீங்கள் இந்த முடிவுகளை எடுத்துதான் ஆக வேண்டும்.” என்று தெரிவித்தார்.