Twitter: சமூகவலைதளமான ட்விட்டரின் பெயரை ‘X’ என மாற்றினார் அதன் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.
ட்விட்டரில் குவியும் மாற்றங்கள்:
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே, ட்விட்டரில் பல மாற்றங்களை செய்து வருகிறார். நிறுவனத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றியமைத்து, காசு கட்டினால்தான் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை பலவற்றை குவித்து தள்ளினார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அடுத்தடுத்த அப்டேட்கள் அமல்படுத்தப்பட்டன. அதோடு, பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத செயலிழந்த கணக்குகளை நீக்கி, காப்பகப்படுத்தும் திட்டத்தையும் ட்விட்டர் அறிவித்தது.
பணம் கட்டி வெரிஃபைடு செய்யப்பட்ட கணக்குகளை கொண்ட பயனாளர்கள் உட்பட பலருக்கும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, வெரிஃபைடு செய்யப்பட்ட பயனாளர்கள், வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் மற்றும் புதிய வெரிஃபைடு செய்யப்படாத பயனாளர்கள் என 3 விதங்களாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
புதிய லோகோ:
இந்நிலையில், தற்போது ட்விட்டரின் பெயரை 'X' என்றும் அதன் லோகோவையும் 'X' என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். குருவி லோகோவுக்குப் பதிலாக டாட்ஜ் (Doge) என்ற நாய் படத்தை லோகோவாக சமீபத்தில் வைத்தார். எனினும், விரைவிலேயே மீண்டும் நீலக் குருவியை லோகோவாக கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது, ட்விட்டர் லோகோ மற்றும் பெயரை 'X' என மாற்றியுள்ளார். மேலும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தலைமை அலுவலக கட்டிடமும் 'x' என்று ஒளிரப்பட்டுள்ளது.
அனைத்திற்கும் ஒரே செயலியா?
தற்போது X.COM என்ற தளமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை கூகுளில் கிளிக் செய்தால் அது தானாக ட்விட்டர் பக்கத்திற்கு எடுத்து செல்லும். மேலும், இந்த லோகோ மற்றும் பெயர் மாற்றத்தை தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, எக்ஸ் நிறுவனத்தை அனைத்து பயன்பாட்டிற்குமான ஒரே ஒரு செயலியாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். அதாவது, சாட், போஸ்ட், உணவுகளை ஆர்டர் செய்தல், பணம் அனுப்புதல் போன்றவற்றை ஒரே செயலியில் மேற்கொள்ளும் வகையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளார் எலான் மஸ்க்.