உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது காசியாபாத். இந்த பகுதியைச் சேர்ந்தவர் காலித் சவுத்ரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவரிடம் சமூக வலைதளத்தில் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் தன் பெயர் தீபக் என்றும், தான் ஒரு பத்திரிகையாளர் என்றும் அறிமுகமாகியுள்ளார்.
லிவ் இன் பார்ட்னர்:
இவர்களது அறிமுகம் நட்பாக மாறி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் காசியாபாத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் லிவ் – இன் டுகெதர் முறையில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.
ஒன்றாக வாழத் தொடங்கியது முதல் தீபக் பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் தீபக் என்று பழகி வந்த அந்த இளைஞரின் பெயர் தீபக் அல்ல காலித் சௌத்ரி என்பது தெரிய வந்துள்ளது. இதையறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மதமாற்றம், கருக்கலைப்பு:
நாளடைவில் அந்த பெண்ணை இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறச் சொல்லி காலித் கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அந்த பெண் கருத்தரித்துள்ளார்.
கருத்தரித்த ஒரே மாதத்தில் அந்த பெண்ணின் கருவை கலைக்க வற்புறுத்தி காலித், அந்த பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதுடன், தன் கருவை கலைக்க வற்புறுத்தியதால் அந்த பெண் வேதனையும், மன உளைச்சலும் அடைந்துள்ளார்.
இளைஞர் கைது:
இதையடுத்து, காசியாபாத்தில் உள்ள விஜய்நகர் காவல் நிலையத்தில் அந்த பெண் அவர் மீது புகார் அளித்தது. அந்த இளைஞர் மீது பாலியல் வன்கொடுமை, மதம் மாற கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிவ் இன் பார்ட்னரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதுடன் அவரது கருவை கலைக்க வற்புறுத்திய சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime: ஆந்திராவில் கணவனின் ஆணுறுப்பை பிளேடால் அறுத்த மனைவி; காரணம் என்னனு தெரியுமா?
மேலும் படிக்க: Crime: தங்கை கொடூர கொலை.. தலையுடன் போலீஸ் நிலையம் சென்ற அண்ணன்.. உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!