எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை கடந்த வியாழக்கிழமை  எலான் மஸ்க் கையகப்படுத்தினார். ட்விட்டர் சிஇஓ பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்குபேரை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.











ட்விட்டரில் பொறுப்பேற்றதில் இருந்து மஸ்க் அதிகம் பேசவில்லை, ஆனால் அவர் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகளை (content moderation decisions)  மேற்பார்வையிட சில வகையான கொள்கை ஆலோசனைக் குழுவை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்த குழு "பல்வேறு கண்ணோட்டங்களை" பிரதிபலிக்கும் என்றும் எலான் மஸ்க் தெரிவிக்கிறார்.


இது குறித்து வெள்ளிக்கிழமை ட்வீட் செய்த எலான் மஸ்க் “தெளிவாக இருக்க, ட்விட்டரின் உள்ளடக்க மதிப்பாய்வு கொள்கைகளில் நாங்கள் இன்னும் எந்த மாற்றமும் செய்யவில்லை" என்றார். முக்கியமாக, கவுன்சில் அமலுக்கு வருவதற்கு முன்பு, எந்த முக்கிய முடிவுகளையும் அல்லது கணக்கு மறுசீரமைப்புகளையும்  செய்யமாட்டேன் என்கிறார் எலான். அதாவது முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை மீண்டும் ட்விட்டருக்கு அழைத்து வரும் எண்ணம் இல்லை என்கிறார்.











சர்ச்சைக்குரிய வலதுசாரி கல்வியாளர் மற்றும்  சுய உதவி எழுத்தாளர் ஜோர்டான் பீட்டர்சனின் மகள் ட்விட்டரில் எலான் மஸ்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதில் ” எலான் மஸ்க் எனது அப்பா  ஜோர்டான் பீட்டர்சனை மீண்டும் இங்கு அழைத்து வர முடியுமா ? அவர் அதிக நேரம் ட்விட்டரை பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமா ? என்றார். இதற்கு பதிலளித்த மஸ்க், "சிறிய மற்றும் சந்தேகத்திற்குரிய காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட எவரும் ட்விட்டர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்" என்னும் மிகப்பெரிய கூற்றை வெளியிட்டார்.