இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான ஒரு அழகான காவியம் "பொற்காலம்". 1997ம் அக்டோபர் மாதம் 30ம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறது. அந்த சமயத்தில் ஒரு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற இப்படம் கிட்டத்தட்ட ஒரு மாதம் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்து சாதனை படைத்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்ற "பொற்காலம்" திரைப்படம் காலங்களை கடந்தும் நிலைக்கும் ஒரு பொக்கிஷம். 


 



 


பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் : 


முரளி, மீனா, சங்கவி, வடிவேலு, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தேனிசை தென்றல் தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்கள். பச்ச கலரு சிங்குச்சா... பாடல் இன்றும் நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பாடல். தஞ்சாவூரு மண்ணு எடுத்து... பாடலை யாராவது மறக்க முடியுமா. வடிவேலு பாடிய ஊனம் ஊனம்... பாடல் நம் மனங்களை எல்லாம் கொஞ்சம் கரைய செய்தது உண்மை தானே. இன்றும் பலரின் பிளே லிஸ்ட் பாடல்களில் இன்றும் இடம்பெற்றிருக்கும்.  


 






 


கதைக்கரு: 


குயவரான முரளி, வாய் பேச முடியாத தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கப் போராடுகிறார். இதற்கு இடையூறாக குடிகார தந்தை இருக்கிறார். அதேசமயம் முரளியை மீனா, சங்கவி இருவரும் விரும்புகின்றனர். ஆனால் திருமண தடை, அண்ணன் படும் கஷ்டம் ஆகியவற்றை தாங்க முடியாமல் தங்கை தற்கொலை செய்துக் கொள்வார். கடைசியில் முரளி தங்கையின் நினைவாக ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்துக் கொள்வார். இப்படி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் கண்கலங்கும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் வடிவேலு குணச்சித்திர கேரக்டரில் பிரமாதமாக நடித்திருப்பார். 


 


மக்களின் இயக்குனர் சேரன் :


சேரனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கும். குடும்பம், கிராமம், தேசப்பற்று என அவரின் படங்கள் அப்படியே ரசிகர்களை புரட்டி போடும் அளவிற்கு வல்லமை படைத்த காவியங்கள். குறிப்பாக அவர் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி, பொற்காலம், தேசிய கீதம் போன்ற படங்கள் அவரின் சினிமா தரத்தை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தது. இப்படி ஒரு உணர்வு பூர்வமான திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் சேரனுக்கு தான் அனைத்து பெருமையும் போய் சேரும்.