ஒவ்வொரு நாளும் கூகுள் தனது டூடுல் மூலமாக மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட யாராவது ஒருவரை நினைவு படுத்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை தங்களின் லோகோவை மாற்றுவதன் மூலம் வழங்குகிறது கூகுள். அந்த வகையில் இன்று புற்று நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் கமல் ரணதிவே அவர்களின் 104 வது  பிறந்தநாளை கொண்டாடுகிறது. கமல் ரணதிவே கடந்த 1917 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள புனேவில் பிறந்தவர். இந்தியாவில் முதன் முறையாக பெண் விஞ்ஞானிகளுக்கான சங்கத்தை தொடங்கியவரும் கூட. கல்வி மற்றும் அறிவியலில் சமத்துவத்தை விரும்பியவர். தந்தையின் ஊக்கத்தினால் மருத்துவ துறையில் ஈடுபாடு கொண்டவரானார். ஆனால் என்னவோ மருத்துவம் படிப்பதைவிட உயிரியல் மீதான நாட்டம் அதிகம் கொண்டவரானார் கமல் ரணதிவே. கடந்த 1949 ஆம் ஆண்டில், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் (ICRC) பணிபுரிந்த பொழுது உயிரணுக்கள் பற்றிய ஆய்வான சைட்டாலஜியில் முனைவர் பட்டம் பெற்றார்.





அதன் பிறகு சில ஆண்டுகள் அமெரிக்காவில் சில ஆராய்ச்சி படிப்புகளுக்காக சென்று மீண்டும் தாயகம் திரும்பிய அவர், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் (ICRC) நிறுவனராக இருந்தார்.அப்போது தொழுநோய் குறித்தான ஆராய்சி, மார்பக புற்றுநோய் குறித்தான ஆய்வு, விலங்குகளுக்கான புற்றுநோய் குறித்த ஆய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்க்கொண்டார்.சில வைரஸ் பாதிப்புகளுக்கு தடுப்பு மருந்துகளையும் இவருக்கு கீழான ஆராய்ச்சி குழு கண்டறிந்தது. இந்தியாவுக்கு சொந்தமான திறமையான மருத்து விஞ்ஞானிகள் மேலை நாடுகளில் பணிபுரிந்துக்கொண்டிருக்கின்றனர் அவர்கள் நாடு திரும்பி தங்களின் சேவையை தாய்நாட்டிற்கு தொடர வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.1989 இல் ஓய்வு பெற்ற  டாக்டர். ரணதிவே ,மகாராஷ்டிராவை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பணியாற்றினார், குறிப்பாக அங்குள்ள பெண்களுக்கு சுகாதாரப் பணியாளர்களாகப் பயிற்சி அளித்தார். மேலும் அவர்களுக்கான அடிப்படை கல்வி அறிவையும் வழங்கியுள்ளார்.  கடந்த 2001 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார்.




இன்று டாக்டர் கமல் ரணதிவேவை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவை சேர்ந்த கூகுள் டூடுல் கிரியேட்டர் இப்ராஹிம் ரைந்தகத் (Ibrahim Rayintakath) இந்த டூடுலை உருவாக்கியுள்ளார்.இந்த டூடுலானது இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, பெரு, சிலி, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து உள்ளிட்ட பல நாட்டு மக்களை சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் டூடுலை முதல் முறையாக  1998 ஆம் ஆண்டு நவடா பாலை வனத்தில் கொண்டாடப்பட்ட பர்னிங் மேன் திருவிழாவை முன்னிட்டு முதன் முறையாக உருவாக்கினாரகள் . அதன் பிறகு 2 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு டூடுடலை கடந்த 2000 வது ஆண்டில் உருவாக்கினர். இது பயனாளர்களை வெகுவாக கவரவே , இந்த டூடுல் தற்போது தினசரியாகிவிட்டது. அவ்வபோது கூகுள் தனது பயனாளர்களுக்கு டூடுல் போட்டிகளை நடத்தி வருவதும், அவற்றில் சிறந்த டூடுலை அங்கீகரிப்பதும் வழக்கம்.