நெல் கொள் முதலில் ஆண்டிற்கு 500 கோடி லஞ்சம் இலக்கு நிர்ணயித்து அப்பாவி உழவர்களிடம் பகற் கொள்ளை, வழிப்பறி செய்து, தலைமை செயலகம் முதல் தரைதளம் வரை பிரித்து, பிணந்தின்னிக் கழுகு போல, அவர்களின் உதிரத்தை உறிஞ்சும் உணவுத்துறை ஓநாய்கள் கண்களை மூடி கண்டுகொள்ளாமல் கூட்டு களவாணித்தனம் செய்வது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.
மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராக செயல்பட்டு வரும் தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஆண்டுதோறும் நெல் கொள்முதல் செய்துவரும் நிலையில், கொள்முதலின் போது, உழவர்களிடம் குவிண்டால் ஒன்றிற்கு லஞ்ச பிச்சையாகவும், பகல் கொள்ளையாகவும் சுமார் 100 லிருந்து 125 வரை கட்டாயமாக்கப்பட்டு, உழவர்களிடம், ஒரு கொள்முதல் பருவத்தில் மட்டும் சுமார் 500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அப்பாவின் உழவர்களின் உதிரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால், லஞ்ச பேய்களால் உறிஞ்சப்பட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் தலைமை செயலகம் முதல் தரைதளம் வரை உள்ள அலுவலர்கள், அதனை பற்றி சிறிதும் கவலைப்படாமல், கூட்டுகளவாணித்தனத்தால், கொழுத்து திரிகின்றனர். பிணந்தின்னி கழுகுகள் போல் பங்குபிரித்து, ருசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இத்தகைய கொள்ளையை குறித்து பல கடிதங்கள் தமிழக அரசின் தொடர்பு உடைய துறைகளுக்கு எழுதியிருந்தும், உருப்படியான, ஆக்கப்பூர்வமான, நடவடிக்கை எதுவும் இல்லாததற்கு காரணம், கிடைக்கின்ற லஞ்சத்தில் பங்கு போட்டு கொள்வதுதான் உண்மையாகிறது. யோக்கியமான, உண்மையான, லஞ்சப்பிச்சையில் பங்க பெற விரும்பாதவர்கள் கீழ்கண்ட உண்மையான நடவடிக்கைகளுக்கு உத்திரவிடுவதோடு, செயல்படுத்திட வேண்டும்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சம்பா பருவத்தில் குறைந்தபட்சம் 2,000 நெல் கொள்முதல் நிலையங்கள், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள், அவர்களது உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்களது அலுவலகங்கள், வீடுகளை திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சம்பா கோடை கொள்முதல் பருவத்தில் சுமார் 2000 வழக்குகள் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரக, மாவட்ட, மாநில, உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள், தகவல் பலகையில் நிரந்தரமாக அமைக்கப்படவேண்டும்.
முன்பதிவு பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். விவசாய சங்கங்கள், அரசியல் தலையீடுகள், கட்டப்பஞ்சாயத்து குறுக்கீடுகள், இடைத்தரகர்கள், விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் அனுமதிக்கக்கூடாது. நடமாடும் நெல் கொள் முதலில் அரசு ஆர்வம் குறைவாக காணப்படுகிறது. எனவே, இது குறித்து சிபிஐ திடீர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும், லஞ்ச முறைகேடுகள் தடுக்க முடியாவிட்டால் இந்திய உணவு கழகம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் தெரிவித்துள்ளனர்.