பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் செயலியின் லோகோவை அதன் நிறுவனர் எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டிஜிட்டல் உலகை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் மக்கள் தகவல்களைப் பெறவும், உரையாடவும், தங்களை அப்டேட் ஆக வைக்கவும் பெரிதும் உதவுகின்றன. அவற்றின் ட்விட்டர் தளத்தின் பங்கு அளவற்றது. 


நீண்ட இழுத்தடிப்புக்கு பின்  உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு அக்டோபரில் ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) விலைக்கு வாங்கினார். அன்று முதல் தன் பெயர் தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்  ட்விட்டரில் அவர் செய்யும் சம்பவங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.


ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் செலுத்த வேண்டும்,  நிறுவனங்களுக்கு தங்க நிற டிக், அரசாங்க அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக் மற்றும்  தனிநபர்களுக்கு நீல நிற டிக் என பல யுக்திகளை கையாண்டார். மேலும் நிறுவனத்தை சீர்படுத்த ஆள்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கினார். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக  செயல்படும் எலான் மஸ்க்  அந்த தளத்தில் அதிக  ஃபாலோயர்களை பெற்ற நபர் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்றார். அவ்வப்போது அவர் ட்விட்டரில் எதாவது ஒரு தலைப்பில் பதிவுகளை வெளியிடுவார். சில நேரங்களில் மற்ற பயனாளர்களின் பதிவுக்கு பதிலளிப்பார். 


மாற்றப்பட்ட லோகோ 


இப்படியான நிலையில்  ட்விட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. நகைச்சுவையாக  பணம் செலுத்தும் முறையை உருவாக்கமென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட  Dogecoin கிரிப்டோகரன்சி முறையை எலான் மஸ்க் நீண்ட காலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதால் Doge coin கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த பிப்ரவரி 15  ஆம் தேதி இதே நாயின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, புதிய CEO என கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும், இவர் மற்ற நபர்களை விட மிகவும் சிறந்தவர் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த லோகோ மாற்றம் செல்போன் செயலியில் இடம் பெறவில்லை. மாறாக கணினி உள்ளிட்ட டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே காணப்படுகிறது.