ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வரும் ஐபிஎல் தொடரை சென்னை அணி இதுவரை 4 முறை வென்றுள்ளது. மும்பை அணிக்கு அடுத்தபடியாக அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி சென்னைதான். கடந்த 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று அசத்தியது சென்னை.


வேட்டையை தொடங்கிய சென்னை அணி:


சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத இருப்பது அதன் கேப்டன் எம்.எஸ். தோனிதான். இச்சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தாண்டும் சென்னை அணி வேட்டையை தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.


சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி பேட்டிங்கைத் தொடங்கிய சென்னையின் தொடக்க ஜோடியான ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக ருத்ராஜ் பந்தை நாலா புறமும் சிதற அடித்தார்.


இவர்களின் பாட்னர்ஷிப்பை உடைக்க லக்னோ எவ்வளவோ முயன்றும் உடனடி பலன் கிடைக்கவில்லை. அதிரடியாக ஆடிவந்த அந்த ஜோடி 5 ஓவர்களில் 60 ரன்கள் குவித்தது. லக்னோவின் பந்து வீச்சை சிதைத்த சென்னையின் தொடக்க ஜோடி 8 ஓவர்களில் 101 ரன்கள் குவித்து மிரட்டி வந்தது. ஒருவிக்கெட்டுக்காக  போராடி வந்த லக்னோ  அணிக்கு ரவி பிஷ்னாய் விக்கெட் எடுத்து கொடுத்தார். 


லக்னோ அணியை அலறவிட்ட சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள்:


சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ருத்ராஜ் அணியின் ஸ்கோர் 10வது ஓவரின் தொடக்கத்தில் 110 ரன்களாக இருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் கான்வேவும் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக சென்னையின் ரன் வேட்டை மந்தமானது. 
 
அதன் பின்னர் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே ரவி பிஷ்னாயிடம் தனது விக்கெட்டை இழந்தார்.  அதில் ஒரு சிக்ஸர் 102 மீட்டர்களுக்கு பறக்கவிட்டார் துபே. விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் சென்னை அணி ரன் வேட்டையை மட்டும் நிறுத்த வில்லை. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது.


சாதனை நாயகன் சென்னை:


கடைசி ஓவரில் களமிறங்கி மூன்று பந்துகளை எதிர்கொண்ட தோனி அடுத்ததடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.  


இன்றைய போட்டியில், சென்னை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்ததன் மூலம் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணிகளின் பட்டியலில் சென்னை அணி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. இதுவரை, 24 முறை 200 ரன்களுக்கு மேல் சென்னை அணி எடுத்துள்ளது.


அதற்கு அடுத்தபடியாக, பெங்களூர் அணி 22 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி 17 முறையும் மும்பை அணி 16 முறையும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.