தவறுதலாக செய்யப்பட்ட 20 ரூபாய் ரீச்சார்ஜுக்கான பணத்தை திரும்ப தரவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், மனு தாரருக்கு ரூ.1020-ஆக  திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் தொடக்கனெல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஹுசைன் ஷரீப். இவர் ஏர்டெல் நிறுவனத்தின் சிம்கார்டை பயன்படுத்தி வருகிறார். இவர் எப்போதும் 49 ரூபாய்க்கான ரீச்சார்ஜ்ஜை தொடர்ந்து செய்துவந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அவரது பேக்கிற்கான வேலிடிட்டி  முடிவடைந்த நிலையில், தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ரூபாயைக் கொண்டு 49 ரூபாய்க்கான பேக்கை ஆன்லைனில் ரீச்சார்ஜ் செய்துள்ளார். அந்த ரீச்சார்ஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, அவரது அக்கவுண்ட்டில் 14.95 ரூபாய் பேலன்ஸ் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மெசேஜும் ஷரீஃபின் எண்ணுக்கு வந்துள்ளது. ஆனாலும், அவருக்கு இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வசதிகள் தடைசெய்யப்பட்ட நிலையிலேயே இருந்திருக்கிறது. சிறிது நேரத்திலேயே வந்த மற்றொரு மேசேஜில் 20 ரூபாய்க்கு செய்யப்பட்ட ரிச்சார்ஜ் செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.


இதனால் கடுப்பான ஷரீஃப், ஏர்டெல் சேவை மையத்தை அழைத்து இதுபற்றி புகாரளித்துள்ளார். ஆனால், 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்தான் அவரது சிம்கார்டுக்கான சேவை மீண்டும் ஆக்டிவேட் செய்யப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஏர்டெல் நிறுவன பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால், சாந்திநகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.


இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணையின்போது தனது தரப்பில்தானே ஆஜராகி வாதாடினார் ஷரீப். அப்போது, 20 ரூபாய்க்கு ஒரு ப்ளானே இல்லை எனும்போது ரீச்சார்ஜை எப்படி ஏர்டெல் ஏற்றுக்கொண்டது என்று கேள்வியெழுப்பியிருந்தார்.




ஏர்டெல் நிறுவனத்திற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்த வழக்கு நடைபெற்ற 5 மாதம் முழுவதும் எந்த விசாரணையிலும் ஏர்டெல் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து ஏர்டெல் நிறுவனத்திற்கும், ஷரீபிற்கும் நடைபெற்ற உரையாடலை ஆராய்ந்த நீதிமன்ற நீதிபதிகள், 20 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். 


20 ரூபாய்க்கு ரீசார்ஜ் ப்ளான் இல்லையெனும்போது, அந்த தொகையை மனுதாரருக்கு ஏர்டெல் நிறுவனம் திரும்ப அளித்திருக்க வேண்டும்.


ஆனால், ஏர்டெல் அதை செய்யத் தவறிவிட்டது. வாடிக்கையாளருக்கு பணத்தை திரும்பக்கொடுக்காமல், 20 ரூபாயைத்தானே வைத்துக்கொண்டது முறையல்லாத வணிக செயல்பாடாகும் என்று கூறிய நீதிமன்றம், மனுதாரருக்கு 20 ரூபாயை திரும்பித்தருமாறும், சேவை குறைபாட்டிற்காக 500 ரூபாய் மற்றும் வழக்கு நடத்தியதற்கான தொகையாக 500 ரூபாய் என்று மொத்தம் 1020 ரூபாயை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.