Xiaomi நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு டேப் மாடல்களை வெளியிட்டுள்ளது. Xiaomi Mi Pad 5 மற்றும் Xiaomi Mi Pad 5 Pro ஆகிய இரண்டு மாடல்களும் ஆப்பிள் நிறுவனத்தின் iPad Proவுக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளன. எனினும் இவை iPad Pro விலையை விட பல மடங்கு குறைவாக இருப்பது பலரின் எதிர்ப்பார்ப்பையும் தூண்டியுள்ளது. Xiaomi நிறுவனத்தால், Apple நிறுவனத்தின் வெளியீடுகளோடு போட்டியிட முடியுமா?


வடிவத்தைப் பொறுத்தவரை, Xiaomi Mi Pad 5 Pro மெல்லியதாகவும், மிகவும் எடை குறைந்த மாடலாகவும் அமைந்திருக்கிறது. இது 6.8 மில்லிமீட்டர் தடிமனைக் கொண்டதாகவும், வெறும் 515 கிராம் எடையைக் கொண்டதாகவும் இருக்கிறது. இதனோடு ஒப்பிடுகையில் iPad Pro M1 இன்னும் குறைவான அளவுகளையே கொண்டிருக்கிறது. இது 5.9 மில்லிமீட்டர் தடிமனும், 470 கிராம் எடையையும் கொண்டது. வடிவத்தை ஒப்பிடும்போது, iPad Pro M1 மாடல் வெற்றி பெறுகிறது.


டிஸ்ப்ளேவை ஒப்பீட்டாகக் கொள்ளும் போது, இரு மாடல்களுமே அற்புதமான டிஸ்ப்ளே தரத்தைக் கொண்டிருப்பவை. 11 இன்ச் diagonal அளவையும், HDR10 certification, the Dolby Vision தரம், Quad HD+ resolution, 120 Hz refresh rate என இரண்டு மாடல்களின் டிஸ்ப்ளேவும் ஒரே வகையிலான தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன. iPad Pro மாடலில் 3D தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவரின் முகத்தைப் பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும். Mi Pad 5 Pro பழைய பாணியிலான பாஸ்வேர்ட் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.



Mi Pad 5 Pro


 


இரண்டு மாடல்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டதாக இருக்கிறது. iPad Pro M1 சமீபத்தில் வெளிவந்த ஆப்பிள் வெளியீடுகளின் அதே Apple M1 தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. இதில் 16 GB RAM மற்றும் 2 TB storage space அளிக்கப்பட்டிருக்கிறது. Xiaomi Mi Pad 5 Pro மாடலில் Snapdragon 870 தொழில்நுட்பமும், 8 GB RAM வசதியும், 256 GB அளவிற்கு UFS 3.1 storage வசதியையும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. தொழில்நுட்ப ஒப்பீட்டில், இரண்டுமே சிறந்ததாக இருப்பினும், iPad Pro M1 சிறந்ததாக இருக்கிறது.


கேமராவின் அடிப்படையில் ஒப்பிடும் போது, இரண்டு மாடல்களிலும் மிகச் சிறந்த கேமரா வசதி இருக்கிறது. எனினும் iPad Pro M1 தனது 13 MP சென்சார் கேமரா, 10 MP ultrawide camera, AR தொழில்நுட்பச் சாதனங்களை ஸ்கான் செய்யும் TOF 3D LiDAR வசதி முதலானவற்றைக் கொண்டு முதலிடம் பெறுகிறது. Mi Pad 5 Pro நமக்கு அளிக்கும் கேமரா தரமானதாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் அது 50 MP முதன்மைக் கேமராவையும், 5 MP ultrawide cameraவையும் மட்டுமே கொண்டிருக்கிறது.   


பேட்டரி என்ற அளவில் இரண்டிலும் பெரிதாக வேறுபாடு எதுவும் பார்க்க முடியவில்லை. iPad Pro M1 மாடலில் 7538 mAh பேட்டரியும், Mi Pad 5 Pro மாடலில் 8600 mAh பேட்டரியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. iPad Pro M1 மாடலில் பேட்டரியின் அளவு குறைவாக இருப்பினும், அதன் ஆயுள் அதிகமாக இருக்கிறது. அதே வேளையில், Mi Pad 5 Pro விரைவில் சார்ஜ் செய்யப்படும் வசதியைக் கொண்டிருக்கிறது.



iPad Pro M1


 


தொழில்நுட்ப அடிப்படையில் எல்லா துறைகளிலும் iPad Pro M1 வெற்றிபெற்றாலும், அதற்கு ஈடு தரும் Mi Pad 5 Pro மாடலை விட, சுமார் இரண்டு மடங்கு விலையைக் கொண்டிருக்கிறது. iPad Pro M1 ஏறத்தாழ 68 ஆயிரம் ரூபாய் விலைக்கு அளிக்கப்படுகிறது. அதே வேளையில், Mi Pad 5 Pro ஏறத்தாழ 28 ஆயிரம் ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மிகக்குறைந்த விலையில், ஆப்பிள் நிறுவனம் வழங்கும் தொழில்நுட்பச் சேவைகளுக்கு நிகரான பயன்பாட்டைப் பெற விரும்புபவர்களுக்கு Mi Pad 5 Pro பயன்படும்.