தனியார் நிறுவனத்திடம் இருந்து கிடைக்க வேண்டிய சுமார் ரூ.91 லட்ச ரூபாயை, ஒரே மெயில் மூலம் பெற சாட்ஜிபிடி தொழில்நுட்பம் உதவியதாக ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞரை வைத்து வழக்கு தொடர்ந்து இருந்தால் தனக்கு பெரும் தொகை செலவு ஆகியிருக்கும் எனவும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.


வைரல் பதிவு:


ChatGPT தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ள நிலையில், Late Checkout என்ற வடிவமைப்பு நிறுவனத்தின் CEO, க்ரேக் ஐசென்பெர்க், பணம் செலவழிக்காமல், வழக்கறிஞரை பணியமர்த்தாமல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.91 லட்சத்தை திரும்பப் பெற ChatGPT எப்படி உதவியது என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார். அதன்படி, ”பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெரு நிறுவனம்  ஒன்று நான் செய்து முடித்த பணிக்கான பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து பெரும்பாலானோர் வழக்கறிஞர்களை நாடுவர்.  ஆனால், நான் சாட்ஜிபிடியை நாடினேன்.   வழக்கறிஞருக்கான கட்டணத்தில் ஒரு ரூபாயை கூட செலவழிக்காமல் ரூ.91 லட்சத்தை நான் எப்படி மீட்டெடுத்தேன் என்பது பற்றிய கதை இங்கே உள்ளது”என குறிப்பிட்டு இருந்தார்.


நடந்தது என்ன?


வாடிக்கையாளரின் விவரங்களை அவர் உள்ளீடு செய்ததும், 3 நாட்களுக்குள் பணத்தை வழங்க வலியுறுத்திய இ-மெயில் ஒன்றை சாட்ஜிபிடி வழங்கியுள்ளது. அதில் சிறு சிறு மாற்றங்களை செய்து க்ரேக் ஐசென்பெர்க் தனக்கு பணத்தை வழங்க வேண்டிய வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ளார்.  அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே வாடிக்கையாளரிடமிருந்து அவருக்கு பதிலும் வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த க்ரேக் ஐசென்பெர்க், டிவிட்டர் பக்கத்தில் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், ”ChatGPTக்கு நன்றி, எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை மீட்டெடுக்க உதவியது. அது எவ்வளவு விரைவாக வேலை செய்தது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. சிறந்த பகுதியாக ChatGPT ஒரு மோசமான காவலராக உணர்ந்தேன், ஆனால் தற்போது அதனை நான் நல்ல காவலராக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மாறுபட்ட கருத்துகள்:


க்ரேக் ஐசென்பெர்க்கின் பதிவிற்கு நெட்டிசன்கள் இருபிரிவுகளாக பிரிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு தரப்பினரோ, சாட்ஜிபிடி சிறபான முறையில் உதவுவதாகவும், நீங்கள் செய்த சிறு சிறு மாற்றங்கள் என்னவென்று கூறினால் நானும் அதை பயன்படுத்திக் கொள்வேன் என சிலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஒருவருக்கு எழுதிய கடிதத்தை மற்றொரு நபருக்கு சிறு மாற்றங்களுடன் பயன்படுத்துவதற்கு, வழக்கறிஞர்கள் ஏன் சில ஆயிரங்களை கேட்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பினரோ, இதை நம்பமுடியவில்லை எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.